துபாய்,
பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்காளதேசத்தை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ஆசிய கோப்பை கிரிக்கெட்
10-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) துபாயில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் டாப்-2 இடங்களை பிடித்த இந்தியா (3 வெற்றியுடன் 6 புள்ளி), பாகிஸ்தான் (4 புள்ளி), ‘பி’ பிரிவில் முதல் இரு இடங்களை பெற்ற நடப்பு சாம்பியன் இலங்கை (6 புள்ளி), வங்காளதேசம் (4 புள்ளி) ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
அரையிறுதி
தாய்லாந்து, ஹாங்காங், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா அணிகள் வெளியேறின. இதற்கிடையில், நேற்று (வியாழக்கிழமை) நடந்த முதலாவது அரையிறுதியில் 7 முறை சாம்பியனான இந்திய அணி, 2018-ம் ஆண்டு சாம்பியனான வங்காளதேசத்தை எதிர்கொண்டது.
149 ரன்கள்
இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஷபாலி வர்மா அதிரடியாக விளையாடினார். அவர் 60(40) ரன்கள் குவித்தார். இதன் மூலம் இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது.
109 ரன்கள்
இதையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேச அணி, இந்திய பந்துவீச்சாளர்கள்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் வங்காளதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்கள் மட்டுமே எடுத்தது.
10-வது முறையாக இறுதிப்போட்டி
இதன் மூலம் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி பெண்கள் ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்திய அணியில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். நந்தனி சர்மா 2 விக்கெட்டுகளையும், ஸ்ரீ சரணி மற்றும் பிரேமா ராவத் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி பெண்கள் ஆசிய கோப்பை வரலாற்றில் 10-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
அரையிறுதி
இன்று நடைபெறும் 2-வது அரையிறுதியில் பாகிஸ்தான் – இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணியை இந்தியா வருகிற 13-ந்தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் எதிர்கொள்ளும்.
