பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ள பிரிக்ஸ் அமைப்பின் மாநாடு வரும் 12 மற்றும் 13 தேதிகளில் டெல்லியில் பாரத் மண்டபத்தில் நடக்கிறது. இம்மாநாட்டிற்கு 4-வது முறையாக இந்தியா தலைமை ஏற்கிறது. ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், தென் ஆப்பிரிக்கா அதிபர் சிரில் ரமபோஸா, ஈரான் அதிபர் மசூத் பெஜெஷ்கியான், எகிப்து அதிபர் அப்தேல் பட்டா எல் சிசி, எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது, இந்தோனேஷியா அதிபர் பிரபாவோ சுபியான்டோ, யுஏஇ சார்பில், அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் ஜயீத் அல்நஹ்யான், பிரேசில் வெளியுறவு அமைச்சர் மவுரோ வியிரா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
டெல்லி வருகை
இந்த மாநாட்டில் பங்கேற்க ரஷிய அதிபர் புதின் இன்று காலை டெல்லி வந்தடைந்தார். மாஸ்கோவில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி வந்தடைந்த புதினை வெளியுறவுத்துறை இணை மந்திரி கேவி சிங்க் விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார். புதின் வருகையை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ரஷிய அதிபர் புதினை வரவேற்றது தொடர்பான புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஷ்வால் கூறியிருப்பதாவது: “18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்காக ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை அன்புடன் வரவேற்கிறோம். விமான நிலையத்தில் மத்திய இணை மந்திரியும், கோண்டா தொகுதி எம்.பி.யுமான கே.வி. சிங் அவரை வரவேற்றார். இந்தியாவும் ரஷியாவும் சிறப்பு மற்றும் முன்னுரிமை பெற்றுள்ள கூட்டாண்மையின் அடிப்படையில் நீண்டகாலமாக பல்வேறு துறைகளில் வலுவான உறவுகளை கொண்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
