`அது மட்டும் துரை வைகோ காதுக்கு போயிடுச்சுன்னா, நெற்றிக் கண்ணைத் திறந்து.!" – மல்லை சத்யா பேட்டி

மதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட மல்லை சத்யா தொடங்கிய திராவிட வெற்றிக் கழகம் இந்தத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரிப்பதாகக் கூறியிருக்கிறது.

இது தொடர்பாக வைகோவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது “I ignore him” என்று கோபமாக அதைக் கடந்துசென்றது நினைவிருக்கலாம்.

திமுக கூட்டணியை ஆதரிப்பதென்றால் வைகோவின் வேட்பாளர்கள் நிற்கும் தொகுதிகளில் பிரசாரம் செய்வீர்களா, உங்கள் ஆதரவுக்கு மதிமுக தரப்பிலிருந்து ஏதாவது எதிர்வினை வந்ததா என மல்லை சத்யாவையே தொடர்புகொண்டு கேட்டோம்.

வைகோ – மதிமுக

“அண்ணன் ஸ்டாலின் ஆட்சி தொடர வேண்டும் என்பது எங்களுடைய விருப்பம். காரணம், கடந்த ஐந்தாண்டுகளில் ஏராளமான வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார். இந்த ஆட்சியில் பெண்கள் அடைந்த பலன்கள் நிறைய இருக்கின்றன. மத்திய அரசின் ஆதரவு இல்லாமலேயே ஏராளமான சாதனைகளைச் செய்திருக்கிறார் என்பதாலேயே ஸ்டாலின் முதலமைச்சராகத் தொடர வேண்டும் என்று நினைக்கிறேன்.

அதனால்தான் எங்கள் கட்சியில் நிறைவேற்றிய தீர்மானத்தை அனுப்பி வைத்து ஆதரவைத் தெரிவித்தோம்.

ஆனால் வைகோ அவர்களின் கூட்டணியில் திமுக இருப்பதால், எங்கள் ஆதரவை பகிரங்கமாக அறிவிப்பதில் திமுக தரப்பில் தயக்கமோ சங்கடமோ இருக்கலாம். அது இயல்பானதுதான். அதற்காக நாங்களும் வருத்தப்படவில்லை.

இந்தப் பக்கம், மதிமுகவிலிருந்து வெளியேறி அந்தக் கட்சி அங்கம் வகிக்கும் ஒரு அணிக்கே ஆதரவு தர வேண்டுமா என்று எங்கள் தோழர்களும் கேட்கவில்லை. ஏனென்றால் அவர்களுக்கும் திமுக ஆட்சி தொடர வேண்டும் என்பதில் எனக்கிருக்கும் அதே கருத்துதான் இருக்கிறது.

ஸ்டாலின்
திமுக | ஸ்டாலின்

அதனால எங்க நிலைப்பாடை நாங்க தெளிவாக சொல்லிட்டோம்.

234 தொகுதிகளுக்கும் எங்க தோழர்கள் பிரசாரத்துக்குப் போறாங்க. எங்க கட்சிக் கொடியை மட்டும் கட்டிட்டுப் போவாங்க. திமுக அணிக்கு ஓட்டு போடுங்கனு கேட்டுப் பிரசாரம் செய்வாங்க.

என்னைப் பொறுத்தவரை எங்க கட்சி சார்பா யாரும் போட்டியிடாததால் கூட்டணித் தலைவர்களுடன் சேர்ந்து மேடையேற வேண்டிய அவசியம் இல்லை.

பிரச்சாரம் செய்யலாம்னு இருக்கேன். எந்தெந்த தொகுதிகளுக்குப் போகலாம்னு இனிமேதான் முடிவு செய்யணும். எல்லாத் தொகுதிகளுக்கும் போக முடியாட்டியும் முக்கியமான இடங்களில் பிரச்சாரம் செய்வேன். ஆனா மதிமுக உறுப்பினர்கள் போட்டியிடுகிற தொகுதிகளுக்குப் போகிற ஐடியா இல்லை’’ என்றவரிடம்,

மல்லை சத்யா
மல்லை சத்யா

“தி.வெ.க ஆதரவு தந்தது தொடர்பாக மதிமுக தரப்பிலிருந்து யாராவது தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார்களா?” என்றதும், மனிதர் உஷ்ணமாகி விட்டார்..

“ஒரு பண்போட அப்படி யாராவது எங்களை தொடர்பு கொண்டு பேசி, அது துரை காதுக்கு போயிடுச்சுன்னா அடுத்த அந்த நபர் அந்தக் கட்சியில இருக்க முடியுமா என்ன? நெற்றிக் கண்ணைத் திறந்து எரிச்சிடுவார் அவங்களை. இன்னைக்கு கட்சி நிலைமையைப் பாருங்க, தனிச்சின்னத்துல போட்டி போடுறோம்னு ஒரு இடத்தை வாங்கிட்டு கடைசியில அதுலயும் உதயசூரியன்லயே போட்டியிடுறோம்னு சொல்லியிருக்காங்க.

கட்சியை கெடுத்து நாசம் பண்ணிட்டார் வைகோவின் மகன். என் மகன் தான் அடுத்த தலைவர், நீ கொஞ்சம் விலகிப் போயிடுனு எங்கிட்ட நேரடியாக் கூப்பிட்டுச் சொல்லியிருந்தாக் கூடா பேசாமப் போயிருப்பேன். ஆனா துரோகி பட்டம் தந்ததாலேயே இன்னைக்கு திவெக-கிற ஒரு கட்சி உதிக்க வேண்டிய அவசியம் உண்டாச்சு. அப்படிப்பட்ட நபர்கள்கிட்ட இருந்து ஒரு நன்றி வரும்னா நான் எதிர்பார்ப்பேன். எங்க ஆதரவை அவங்க ஒரு பொருட்டா எடுத்துக்கிட்டாலும் எடுத்துக்காம போனாலும் எங்களுக்கு அதுபத்தி கவலை இல்லை. நாங்க ஆதரவு தெரிவிக்கிறது திமுக மீண்டும் ஆட்சிக்கு வரணும்னு மட்டுமே’’ என்கிறார் மல்லை சத்யா.   

Source link