எப்படி இருக்கிறார் MLA வி.எஸ்.பாபு? உடல்நிலை பாதிப்புக்கு இதுதான் காரணமா? மருத்துவமனை சொன்ன தகவல் – mgm hospital administration has stated that mla v.s. babu has a lung infectio

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், தவெக மூத்த தலைவருமான வி.எஸ். பாபு, மூச்சுத்திணறல் காரணமாகச் சென்னையில் உள்ள எம்.ஜி.எம் (MGM Healthcare) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உடல் நிலை இப்போது எப்படி இருக்கிறது?

எம்.ஜி.எம் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை: வி.எஸ்.பாபு அனுமதிக்கப்பட்டுள்ள எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில், “வி.எஸ். பாபு அவர்கள் மூச்சுத்திணறல் காரணமாகச் செப்டம்பர் 9-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) மருத்துவ நிபுணர்கள் குழுவின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவருக்குத் தேவையான உரிய மருத்துவ சிகிச்சைகளும், சுவாச ஆதரவும் வழங்கப்பட்டு வருகின்றன. அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் மரிய வில்சன் நேரில் விசாரணை

இந்த நிலையில், மருத்துவமனைக்கு நேரில் சென்று வி.எஸ். பாபுவைச் சந்தித்து நலம் விசாரித்த நிதி அமைச்சர் மரிய வில்சன், செய்தியாளர்களிடம் பேசுகையில்: பாபு அண்ணன் தற்போது நலமாக இருக்கிறார். அவருக்குச் சாதாரண சளி மற்றும் இருமல் காரணமாகவே மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வருவதால் அவரது உடல்நிலை வேகமாகத் தேறி வருகிறது. அவர் என்னிடம் இயல்பாகப் பேசினார். மேலும், தமிழக முதலமைச்சர் விஜய்யும் தொலைபேசி வாயிலாக அவரைத் தொடர்புகொண்டு நலம் விசாரித்துள்ளார் என்று தெரிவித்தார்.

மருத்துவமனை கூறியது என்ன?

வி.எஸ். பாபு தீவிர சிகிச்சைப் பிரிவில் (Critical Care Unit) தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருக்கு நுரையிரலில் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காக சமீப நாட்களாக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. அவரது ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவைச் சீராக வைப்பதற்காகச் (Vitals stabilization) செயற்கை சுவாசம் பொறுத்தப்பட்டுத் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

தவெக வட்டாரங்கள் நிம்மதி..

சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தவர் வி.எஸ். பாபு. அதிலும் அவர் தேர்தல் முடிவுக்குப் பிறகு முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் போலவே செய்த செய்கை பிரபலமானது.

சட்டசபை கூட்டத்தொடரிலும் துடிப்புடன் பங்கேற்று வந்தார். கொளத்தூர் தேர்தல் முடிவை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு தள்ளுபடியானதும் உற்சாகமாக பேட்டியும் அளித்திருந்தார் வி.எஸ்.பாபு.

அவரது திடீர் உடல்நலக்குறைவு தவெக தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், மருத்துவமனையின் அறிக்கை மற்றும் அமைச்சரின் தகவலைத் தொடர்ந்து தவெக வட்டாரங்களும் கட்சித் தொண்டர்களும் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர். தொடர்ந்து தவெகவினர் அவரது உடல்நிலை குணமாக வேண்டி பிரத்தானையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

யார் இந்த வி.எஸ். பாபு?

ஆரம்பத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் (திமுக) இணைந்து செயல்பட்ட இவர், வடசென்னை மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்துள்ளார். 2006 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு புரசைவாக்கம் தொகுதியிலிருந்து முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2011 தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தேர்தல் பணி ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார். மு.க.ஸ்டாலின் வெற்றிக்காக பாடுபட்ட முக்கியஸ்தர்களில் இவரும் ஒருவர். ஆனால் கட்சி ரீதியான கருத்து வேறுபாடுகளால் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். பின்னர் பிப்ரவரி 2026-இல் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) தன்னை இணைத்துக் கொண்டார்.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக வேட்பாளராகக் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு, 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். பின்னர் மு.க.ஸ்டாலின் செய்தது போல சைகை செய்து மக்கள் மத்தியில் கவனம் பெற்றார்.

சமீபத்தில் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி. எஸ். பாபு வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதில் 6 வாக்கு சாவடிகளில் பதிவான வாக்குகள் மற்றும் வி.வி பேடுகளை ஒப்பிட்டு பார்த்ததில் முறைகேடு நடந்துள்ளதாகவும், பல வாக்குப்பதிவு இயந்திரங்களில் மென்பொருள் கோளாறு ஏற்பட்டுள்ளதாக குற்றம்ச்சாட்டி இருந்தார். ஆனால் அந்த வழக்கு வி. எஸ். பாபுவுக்கு சாதகமாகவே அமைந்தது. மு.க.ஸ்டாலின் கோரிக்கை தள்ளுபடியானது நினைவிருக்கலாம்.

அனைவரது கவனமும் தற்போது வி.எஸ்.பாபு மீது திரும்பியுள்ள நிலையில் அவர் நலமுடன் இருப்பதாக அமைச்சர் கூறியிருப்பது தவெகவினரை ஆறுதல் அடையச் செய்துள்ளது.

Source link