தவெக ஆட்சி அமைத்து மூன்று மாதங்களை கடந்து விட்ட நிலையில், எதிர்க்கட்சிகள் புதிய அரசை நோக்கி விமர்சனங்களை அடுக்க துவங்கி விட்டன. அதோடு அறிவிக்கப்படாத மின்வெட்டு, விலைவாசி உயர்வு மற்றும் வாக்குறுதியை நிறைவேற்றாதது உள்ளிட்ட காரணங்களால் தவெக ஆட்சி மீது மக்கள் மத்தியில் அதிருப்தி உருவாக துவங்கி விட்டதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இந்நிலையில் அமைச்சர்களை மக்கள் விரட்டி அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க என திமுக ஐடி விங் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளது.
அதாவது தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஜெகதீஸ்வரி. இவர் தமிழக சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் ராஜபாளையம் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக அமைச்சர் ராஜேஸ்வரி வருகை தந்தார். அப்போது அவரிடம் மின்வெட்டு மற்றும் டாஸ்மாக் பிரச்னை தொடர்பாக பொதுமக்கள் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் ஜெகதீஸ்வரி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்நிலையில் இந்த நிகழ்வு தொடர்பாக திமுக ஐடி விங் கடும் விமர்சனங்களை முன்வைத்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், தேர்தல் சமயத்தில் மாற்றம் என சொல்லி ஓட்டு கேட்டுவிட்டு, வெற்றி பெற்றதற்கு பின்பாக பந்தாவா வர்ற அமைச்சர்களை மக்கள் விரட்டியடிக்க ஆரம்பிச்சிட்டாங்க.
கரண்ட் இல்லை, தண்ணி இல்லையென மக்கள் அவதிப்பட்டப்போ எங்க போயிருந்தீங்க? இது வெறும் ட்ரெய்லர் தான் இனிமே ரீல்ஸ்ல பில்டப் கொடுத்துட்டு திரியுற இந்த டம்மி அரசாங்கத்தோட யோக்கியதை, மக்கள் முன்னாடி பல இடங்களில் சுக்குநூறாக உடையப் போகுது. இவ்வாறு திமுக ஐடி விங் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு ராஜபாளையம் தொகுதி மக்கள் தவெகவினருடன் வாக்குவாதம் செய்யும் வீடியோ காட்சியும் பகிரப்பட்டுள்ளது.
முன்னதாக அமைச்சர் ஜெகதீஸ்வரி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார். அப்போது பொதுமக்கள் கேள்வி எழுப்ப, உங்களுடைய கோரிக்கை அனைத்தும் ஒவ்வொன்றாக சரி செய்யப்படும். கண்டிப்பாக நீங்கள் கேட்கும் அனைத்தையும் சரி செய்வேன் என்றார். அதன்பின்னர் அவர் புறப்பட்டு போனதற்கு பின்பாக மின்வெட்டு தொடர்பாக பொதுமக்கள் ஆவேசமாக கேள்விகளை எழுப்பினார்கள். நைட் 12.30 மணிக்கு கரெண்ட் வருது. மொத டாஸ்மாக் கடையை அடைக்க வேண்டும் என்றார்கள்.
அதோடு நேத்து கரெண்ட் போச்சு. இன்னைக்கு அமைச்சர் வரவும் கரெண்ட் போகலை. நாங்க கேட்க போனால் அவுங்க கட்சிக்காரங்க தள்ளி விடுறாங்க. பகல்ல கரெண்ட் போறதில்லை. நைட்டு தான் போகுது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அப்போது தவெகவினர் பொதுமக்களிடம் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தனர். இதனால் ஒருவர் வந்து தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கிளம்புங்கள் என்று சொன்னார்.
அவரிடமும் மக்கள் கேள்விகளை எழுப்ப ஆரம்பிக்க, அதன்பின்னர் அந்த நபரும் அங்கிருந்து கிளம்பி விட்டார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக, மக்கள் அமைச்சர்களை விரட்டியடிக்க ஆரம்பிச்சிட்டாங்க என திமுக ஐடி விங் விமர்சனத்தை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
