மதுராந்தகம் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர், தொகுதி மக்களிடையே மீண்டும் வாக்கு சேகரித்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்ததாவது:நான் ஒன்றும் இந்தத் தொகுதிக்கும் மக்களுக்கும் புதியவள் அல்ல. கடந்த 2011 முதல் 2016 வரை இந்தத் தொகுதி மக்களின் தேவைகளை அறிந்து மிகச் சிறப்பாகப் பணியாற்றியுள்ளேன். நீதிமன்றம், தாலுகா அலுவலகம், செக்போஸ்ட், கண்டிப்படை பாலம், செய்யூர் பாலம், பசுமை வீடுகள், குடிநீர் மற்றும் சாலை வசதிகள், நியாயவிலைக் கடைகள் என நான் செய்து கொடுத்த திட்டங்களை மக்கள் இன்னும் மறக்கவில்லை. ஜெமினி அந்தம்பூர் பகுதி மருத்துவமனையை 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக உயர்த்தியதுடன், பல கிராமங்களுக்குப் புதிய பேருந்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளேன்.
எந்த நேரத்திலும் என்னை அணுகக்கூடிய அளவிற்கே நான் மக்களுக்காக உழைத்துள்ளேன். எனவே, எடப்பாடியார் அறிவித்துள்ள நமது அதிமுக வேட்பாளரை மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்கத் தொண்டர்களும் மக்களும் மிகுந்த உற்சாகத்தோடு தயாராக உள்ளனர் என்று கூறினார்.
மேலும் கட்சித் தாவல் மற்றும் ராஜினாமா குறித்த கேள்விக்கு தேர்தல் வேட்பாளர்கள் திடீரெனப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேறொரு கட்சிக்குத் தாவுவது குறித்த கேள்விக்கு பொதுமக்கள் தங்களின் சொந்த வேலைகளை விட்டுவிட்டு வந்து வாக்கு செலுத்துகிறார்கள். ஆனால், ‘வைத்த மை காயும் முன்னரே’ பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேறொரு கட்சிக்கு மாறுவது வாக்காளர்களையும், தேர்தல் ஆணையத்தையும் ஏமாற்றும் செயல் அல்லவா?
இரத்த வேர்வை சிந்தி உழைத்த அண்ணா திமுக தொண்டர்களின் உழைப்பை மதிக்காமல், ஐந்து நாட்களில் பதவியை ராஜினாமா செய்வதற்கு எதற்குப் போட்டியிட வேண்டும்? இதை மக்கள் கண்டிப்பாகக் கேள்வி கேட்பார்கள். மதுராந்தகம் எப்போதுமே அதிமுகவின் எஃகு கோட்டை; மக்களின் ஆதரவோடு எங்கள் வெற்றி உறுதி” எனத் தெரிவித்தார்.
