தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தனி தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. மதுராந்தகத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மரகதம் குமரவேலும், தாராபுரத்தில் சத்யபாமாவும் களமிறங்க உள்ளனர்.
மதுராந்தகம் இடைத்தேர்தல் ..
இவர்களுக்கு ஏற்கனவே கூட்டணியில் இருக்கக்கூடிய காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக ,இந்தியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது.மேலும் அவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரத்திலும் ஈடுபடும் உள்ளதாக சமீபத்தில் நடந்த மதசார்பற்ற சமூக நீதி கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.மதுராந்தகம் தனித் தொகுதி எனும் வன்னியர் சமூதாய ஓட்டு கணிசமாக உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் மதுராந்தகத்தில் பாமகவின் ஓட்டுகள் தான் அதிக அளவில் கை கொடுத்ததால் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றிக்கு காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது
பாமக, இடதுசாரிகள் ஆதரவு யாருக்கு?
ஆனால் தற்பொழுது மரகதம் குமரவேல்தவெக சார்பில் போட்டியிட உள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் இருக்கும் பாமக ஆதரவு யாருக்கு என்ற கேள்வி தற்போது அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. இடைத்தேர்தலில், பாமகவின் ஆதரவை பெற தவெக தீவிரமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்காக பாமக தலைமையுடன் முக்கியத் தலைவர்கள் மூலமாக பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.
வட மாவட்ட தொகுதியான மதுராந்தகத்தில் வன்னியர் சமூகத்தினர் ஓட்டுக்கள் அதிகம் என்பதால் பாமக.,வின் ஆதரவும், அக்கட்சி தலைவர்களின் பிரச்சாரமும் கைகொடுக்கும். பாமக ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இருக்கிறது. ஆனால் சமீப காலமாக தவெக உடன் இணக்கம் காட்டி வருகிறது.
அதிமுக.,விற்கு ஆதரவு அளிப்பதால் பாமக.,விற்கு பெரிதாக பலன் எதுவும் கிடைக்க போவதில்லை. அதேசமயம், தவெகவிற்கு ஆதரவளித்து அக்கூட்டணி வெற்றி பெறும் பட்சத்தில், எதிர்காலத்தில் விசிக அல்லது இடதுசாரிகள் ஆதரவை வாபஸ் பெற்றாலும் பாமகவிடம் உள்ள 4 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுதவெக அரசைக் காப்பாற்றக் கை கொடுக்கும். இதன் மூலம் பாமக ஒரு அமைச்சர் பதவியையோ அல்லது அடுத்தடுத்த இடைத்தேர்தல்களில் கூடுதல் தொகுதிகளையோ கேட்டுப் பெற வாய்ப்புள்ளது.
அதேவேளையில், தவெக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக, பாமக உள்ளே வருவதைக் கடுமையாக எதிர்க்கக்கூடும். முன்னதாக திமுக கூட்டணிக்கு டாக்டர் ராமதாஸ் வரத் தயாராக இருந்தபோதும் திருமாவளவன் அதனைத் தடுத்ததாகக் கூறப்படும் நிலையில், தவெக கூட்டணியிலும் இதே சூழல் நிலவுகிறது. இதனால்தான் பாமகவின் ஆதரவை பகிரமங்காகக் கோர முடியாத நிலையில் தவெக உள்ளது.
இடதுசாரிகள் நிலைப்பாடும் அதன் தாக்கமும்:
மற்றொருபுறம், இடதுசாரி கட்சிகளுக்குப் பெரிய அளவிலான வாக்கு வங்கி இல்லை என்றாலும், அவர்களின் அரசியல் நிலைப்பாடு தவெகவிற்கு மிக முக்கியமானது. ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த இடதுசாரிகளே தவெகவிற்கு ஆதரவளிக்கத் தவறினால், “கூட்டணியில் உள்ள கட்சிக்கே தவெக மீது நம்பிக்கை இல்லை” என்ற பிம்பம் பொதுமக்கள் மத்தியில் உருவாகக்கூடும்.
இது தவெக அரசின் செயல்பாடுகள் குறித்த எதிர்மறை எண்ணத்தை வாக்காளர்களிடையே ஏற்படுத்தி, இடைத்தேர்தல் முடிவுகளில் தவெகவின் வெற்றியைப் பெரிய அளவில் பாதிக்கும் அபாயத்தையும் உருவாக்கியுள்ளது.
ஆக மொத்தம் இந்த இரு கட்சிகளின் ஆதரவும் கவனிப்புக்குரியதாகியுள்ளது. இதில் பாமகவின் ஆதரவு என்பது வெற்றிக்கு உதவும். கம்யூனிஸ்டுகளின் ஆதரவு இமேஜை தக்க வைக்க உதவும்.
