மதுரை,
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ‘சேயோன்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுதொடர்பான வீடியோ ஒன்றையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
‘சேயோன்’ படம்
‘அமரன்’ படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படம் ‘சேயோன்’. ‘தாய் கிழவி’ படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் இப்படத்தை இயக்குகிறார். தமிழ்க்கடவுள் முருகனை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளதால், இப்படத்திற்கு ‘சேயோன்’ என பெயரிடப்பட்டுள்ளது.
கிராமத்து கமர்சியல் கதை
மதுரை மண்ணின் பாரம்பரியப் பின்னணியில் உருவாகி வரும் இப்படம், பக்கா கிராமத்து கமர்சியல் எண்டர்டெய்னராக உருவாகி வருகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில், பிரபல தெலுங்கு நடிகை பாக்யஸ்ரீ போர்ஸே, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். கடந்த ஜூன் மாதம் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தது.
பிரமாண்ட செட்களில் படப்பிடிப்பு
இதைத்தொடர்ந்து மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரமாண்டமான செட்கள் அமைக்கப்பட்டு, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. இதில் முக்கியமான ஆக்ஷன் காட்சிகள் மற்றும் குடும்பக் காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த படப்பிடிப்பில் இயக்குநரும், நடிகரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் கலந்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின.
2-ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு
இந்த நிலையில், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ‘சேயோன்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுதொடர்பான வீடியோ ஒன்றையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. ‘சேயோன்’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
