பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் தேவையற்றது: CM விஜய் கைவிட எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் – aiadmk general secretary edappadi k palaniswami urges cm vijay to stop pattinapakkam new secretariat

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கடுமென தமிழ்நாடு அரசு சமீபத்தில் அரசாணை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலகம்- தொடர்ந்து எழும் எதிர்ப்பு

இந்த அறிவிப்பை முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் அறிவித்த நாள் முதல், இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பட்டினப்பாக்கத்தில் 1,200 கோடி ரூபாயில் அமைக்கப்படும் இந்த புதிய தலைமைச் செயலகம் குறித்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதில், ஒரு தலைமைச் செயலக வளாகத்திற்குத் தேவையான மருத்துவமனை, உணவகம், வாகன நிறுத்துமிடம், பொதுப் போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட பலவற்றை ஏற்படுத்த பட்டினப்பாக்கம் உகந்த இடமாக இல்லை. பல்வேறு நாடுகளில் அவசர கதியில் நெருக்கடியான இடங்களில் தலைமை செயலகங்கள் கொண்டு வரப்பட்டு, பின்னர் அவை கைவிடப்பட்டதை வரலாற்று ரீதியாகப் பார்க்க முடிகிறது என தெரிவித்தார்.

அவரை தொடர்ந்து அதிமுக எம்பி இன்பதுரை, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், சிபிஐ மாநிலத் செயலாளர் மூ. வீரபாண்டியன் உள்ளிட்டோர் சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க கூடாது என தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

புதிய தலைமைச் செயலகம் அமைக்க முயற்சித்த எம்ஜிஆர், ஜெயலலிதா

இந்த சூழலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டிய சாந்தோம் சாலை, காலம் காலமாக வசித்து வரும் மீனவர்கள், பொதுமக்களின் குடியிருப்புகள், பள்ளிகள், வாகன போக்குவரத்து நெரிசல் என்று மிகவும் நெருக்கடியான பகுதியாக உள்ளது.
இடநெருக்கடி, வாகனப் போக்குவரத்து நெரிசல் இல்லாத இடத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட வேண்டும் என்று அதிமுக ஆட்சியில் இருந்த காலங்களில் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் செல்வி ஜெயலலிதா ஆகியோர் முயற்சிகளை மேற்கொண்டார்கள்.

முதல்வர் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

விவசாயிகள் பிரச்சனை, பொதுமக்களின் சமூக நலப் பிரச்சனைகள் மற்றும் கடுமையான நிதி நெருக்கடி, கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் இந்த நிலையில், கடன் வாங்கி ரூ. 1,200 கோடி செலவு செய்து பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தற்போது அவசியமற்றது.

புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டாம் என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூறவில்லை. தமிழகத்தின் நிதிநிலை சீரான பின்பு, போக்குவரத்து நெரிசலற்ற, மக்களுக்கு பாதிப்பு இல்லாத இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட உத்தேசிக்கலாம். தற்போதைய நிலையில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தேவையற்றது. எனவே, இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று தவெக அரசின் முதலல்வர் ஜோசப் விஜய்-ஐ வலியுறுத்துகிறேன் என அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Source link