சென்னை: 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது அனுமதியின்றி கூட்டம் கூடியது, பள்ளியில் விதிகளை மீறி கூட்டம் நடத்தியது தொடர்பாக மத்திய அமைச்சர் எல்.முருகன் மீது தொடரப்பட்ட இரண்டு தேர்தல் விதிமீறல் வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
கடந்த 2024ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நீலகிரி தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிட்டார்.அப்போது தேனாடுகம்பை கடநாடு கிராமத்தில் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு ஊட்டி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடக்கிறது.
அதேபோல், நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட சத்தியமங்கலம் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் விதிகளை மீறி கூட்டம் நடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு ஈரோடு நீதிமன்ற விசாரணையில் உள்ளது.
இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் எல்.முருகன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ” அரசியல் உள்நோக்கம் காரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவற்றை ரத்து செய்ய வேண்டும்,” எனக்கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, குறித்த காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்பதால் இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என எல்.முருகன் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஜெகதீஸ் சந்திரா, எல்.முருகன் மீதான இரண்டு வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.
