நடிகர் பரத் நடிப்பில் வெளியான காளிதாஸ் திரைப்படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு அவருக்கு ஒரு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. தற்பொழுது மீண்டும் நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் அதே பரத் நடிப்பில் வெளியாகி இருக்கிறது. முதல் பாகம் போல் உணர்ச்சிகரமான மர்டர் மிஸ்டரி திரில்லராக வெளியாகியுள்ள இரண்டாம் பாகம் நல்ல வரவேற்பை பெற்றதா, இல்லையா?
500 பேருக்கு மேல் வசிக்கும் ஒரு மிகப்பெரும் அப்பார்ட்மெண்டில் அபர்ணதி அவரது கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். அதே அடுக்குமாடி குடியிருப்பில் இன்னொரு நாயகன் அஜய் கார்த்தி வசிக்கிறார். இவருக்கு அபர்ணதியின் குழந்தையின் மேல் எப்பொழுதும் கண்ணாக இருக்கிறார். அவரைத் தொடர்ந்து ஃபாலோ செய்கிறார். ஒரு நாள் அபர்ணதியின் குழந்தை காணாமல் போக அதை துப்பு துலக்க போலீஸ் ஆபீஸர் பரத் மற்றும் மற்றொரு போலீஸ் ஆபீசர் பவானி ஸ்ரீ அடுக்குமாடி குடியிருப்பு வருகின்றனர். வந்த இடத்தில் அந்த குழந்தை பிணமாக கிடைக்க அந்த கொலையை செய்தது யார்? அந்த கொலைக்கும் அஜய் கார்த்திக்கும் என்ன சம்பந்தம்? கொலையாளியை போலீசார் கண்டுபிடித்தார்களா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை.
காளிதாஸ் படத்தை வித்தியாசமான முறையில் சிறப்பான மர்டர் மிஸ்டரி படமாக கொடுத்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் ரசிக்க வைத்த இயக்குநர் ஸ்ரீ செந்தில், இரண்டாம் பாகத்தையும் அதே போல் ரசிக்க வைத்திருக்கிறார். படம் ஆரம்பித்து முதல் பாதி வரை மிகவும் மெதுவாக நகர்ந்து குறிப்பாக மலையாள சினிமா போல் ஸ்டேஜுங்குக்கு வெகு நேரம் எடுத்துக் கொண்டு பின் கதைக்குள் செல்லும் திரைப்படம் இரண்டாம் பாதியில் வேகம் எடுத்து இறுதி கட்டத்தில் விறுவிறுப்பாகவும் பல்வேறு திருப்புமுனைகள் நிறைந்தும் ரசிக்க வைத்திருக்கிறது. ஒரு கொலை அதை சுற்றி நடக்கும் சம்பவங்கள் அதை துப்பு துலக்கும் போலீஸ் என வழக்கமான பாணியை கையில் எடுத்திருக்கும் இயக்குநர் அதை சிறப்பான முறையில் விறுவிறுப்பாக சீட்-நுனி திரில்லராக, யூகிக்க முடியாத திரைக்கதை மூலம் ரசிக்க வைத்திருக்கிறார். இரண்டாம் பாதியில் இருந்த வேகமும் விறுவிறுப்பும் முதல் பாதியிலும் கொடுத்திருந்தால் இந்த படம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.
நாயகன் பரத் வழக்கம் போல் போலீஸ் கதாபாத்திரத்தில் மிடுக்கான தோற்றத்துடன் நிறைவாக நடித்திருக்கிறார். அவருக்கு என்ன வருமோ அதை சிறப்பான முறையில் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். நாயகி பவானி ஸ்ரீ, துருதுரு போலீசாக வந்து கவர்ந்திருக்கிறார். அவர் அதிகப்பிரசங்கித்தனம் செய்து அவமானப்படும் இடத்திலும் சரி, துடுக்கான வேலைகளில் ஈடுபடுவதிலும் சரி அளவான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். அபர்ணதி இன்னொரு நாயகியாக வந்து தனக்கு கொடுத்த வேலையை நேர்த்தியாக செய்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு பூவே உனக்காக சங்கீதா இந்த படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். அவரின் அனுபவ நடிப்பு சிறப்பாக அமைந்திருக்கிறது. முக்கிய பாத்திரத்தில் வரும் பிரகாஷ்ராஜ் மற்றும் கிஷோர் சிறப்பு தோற்றத்தில் வந்து கவர்ந்திருக்கின்றனர். மற்றபடி உடனடித்த அனைத்து நடிகர்களுமே அவரவர் வேலையை சிறப்பாக செய்து படத்திற்கு வலு சேர்த்து இருக்கின்றனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/04/02/114-2026-04-02-18-53-39.jpg)
வழக்கம்போல் பாடல்களை காட்டிலும் பின்னணி இசையை மிகவும் இறைச்சலான இசையாக கொடுத்து இருக்கிறார் இசையமைப்பாளர் சாம் சி எஸ். ஒரே ஒரு பாடல் மட்டும் சிறப்பு, பின்னணி இசை சில இடங்களில் மட்டும் மிரட்டல். சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவில் இன்வெஸ்டிகேட்டிவ் காட்சிகள் விறுவிறுப்பாகவும் நேர்த்தியாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. திரில்லர் படத்திற்கே உரித்தான காட்சி அமைப்புகளை சிறப்பாக கொடுத்து இருக்கிறார்.
ஒரு திரில்லர் படத்திற்கு என்னென்ன தேவையோ அதை சிறப்பான முறையில் கொடுத்து ஒரு நல்ல மர்டர் மிஸ்டரி படம் பார்த்த உணர்வை இந்த காளிதாஸ் 2 திரைப்படம் கொடுத்திருக்கிறது. இருந்தும் ஸ்டேஜுங்குக்கு இவ்வளவு நேரம் எடுத்துக் கொள்வது தேவையா? அதேபோல் முதல் பாதியில் இருக்கும் நீளமும் அயர்ச்சியான காட்சி அமைப்புகளும் தேவையா? அதை தவிர்த்திருக்கலாம். இருந்தும் இவை அனைத்தையும் இரண்டாம் பாதி சரி செய்து சரி கட்டி விடுகிறது. இரண்டாம் பாதிக்கு கொடுத்த முக்கியத்துவத்தை முதல் பாதியிலும் கொடுத்திருந்தால் இன்னமும் சிறப்பாக அமைந்திருக்கும்.
‘காளிதாஸ் 2’ – சென்டிமென்ட் திரில்லர்!
