தமிழகத்திற்கு புதிய டிஜிபி; அதிகாரிகள் திடீர் மாற்றம்- தேர்தல் ஆணையம் அதிரடி

2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாக பரப்புரையில் இறங்கியுள்ளன. இதனிடையே, தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி இருக்கிறது. விடுமுறை நாட்கள் போக வேட்புமனு தாக்கல் செய்ய 4 நாட்களே இருப்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேபோல் பிரச்சாரத்திலும் தீவிரம் காட்டி வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் தீவிரமாக அமலுக்கு வந்துள்ள நிலையில் பல்வேறு இடங்களில் தீவிர சோதனைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சந்திப் ராய் ராத்தோரை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல் சேலம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சேலம் மாவட்ட ஆட்சியராக அருண் தம்புராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக விஷ்ணு மகாஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமனை தமிழக அரசு நியமித்திருந்த நிலையில் நிரந்தர டிஜிபி நியமிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டிருந்தது. மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் இது தொடர்பான நடைமுறைகளின் படி டிஜிபியை தேர்ந்தெடுப்பதற்காக ஏற்கனவே ஆலோசனைகள் நடத்தப்பட்டு, இறுதி செய்யப்பட்ட பரிந்துரை பட்டியலில் சந்தீப் ராய் ரத்தோர் பெயரும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. தேர்தலுக்கு முன்பதாகவே இந்த நியமனம் நடக்கும் என்ற  எதிர்பார்ப்பு இருந்த நிலையில், தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்   தற்போது தேர்தல் ஆணையம் சந்தீப் ராய் ரத்தோரை தமிழக சட்ட ஒழுங்கு டிஜிபியாக நியமித்துள்ளது.

1992-ஆம் ஆண்டு பேட்ச்சைச் சேர்ந்த மூத்த ஐ.பி.எஸ் அதிகாரியான சந்தீப் ராய் ரத்தோர் ஜூன் 2023 முதல் ஜூலை 2024 வரை சென்னை மாநகரக் காவல் ஆணையராகப் பணியாற்றினார்.  2021-இல் ஆவடி மாநகர காவல் ஆணையரகம் உருவாக்கப்பட்டபோது, அதன் முதல் காவல் ஆணையராகப் பொறுப்பேற்றார். பேரிடர் மேலாண்மை குறித்த ஆய்வுக்காக முனைவர் பட்டம் பெற்ற சந்தீப் ராய் ரத்தோர் சிறப்பான பணிக்காகக் குடியரசுத் தலைவர் விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்ட ஒழுங்கு டிஜிபி மட்டுமல்லாது நான்கு காவல்துறை அதிகாரிகளும் மாற்றப்பட்டுள்ளனர். தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் மாற்றப்பட்டு சஞ்சய் குமாரை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. மதுரை காவல் ஆணையர் லோகநாதன் மாற்றப்பட்டு மதுரை காவல் ஆணையராக அபிஷேக் தீக்ஷித் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு மண்டல காவல்துறை ஐ.ஜியாக ரம்யா பாரதி நியமிக்கப்பட்டுள்ளார்.

Source link