இந்தியாவுக்கு சீன அதிபர் ஜின்பிங் 7 ஆண்டுக்கு பிறகு வருவதன் முக்கியத்துவம் என்ன?

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, 2024-ல், ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டின்போது இரு தலைவர்களும் சந்தித்தனர்.

சீன அதிபர் ஷி ஜின்பிங் 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வருகிறார். செப்டம்பர் 12 மற்றும் 13ஆம் தேதிகளில் புதுடெல்லியில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இந்தியா வருகிறார்.

ஜின்பிங் டெல்லிக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், அவர் இந்தியப் பிரதமர் மோதியுடன் இருதரப்பு சந்திப்பை நடத்துவாரா என்பது தெளிவாக இல்லை.

இதற்கு முன்பு 2019ஆம் ஆண்டு, சென்னை அருகே மாமல்லபுரத்தில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஷி ஜின்பிங் இந்தியா வந்திருந்தார்.

ஆசியாவின் இரு வல்லரசுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளைச் சீர்படுத்துவதற்கான தற்போதைய முயற்சிகளிலும், பிரிக்ஸ் ஒத்துழைப்பிலும் அவரது இந்த பயணம் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

மத்திய கிழக்கில் நீடிக்கும் மோதல் மற்றும் ரஷ்யா-யுக்ரேன் போர் காரணமாக உலகளாவிய சூழல் சிக்கலானதாக இருக்கும் நிலையில் இந்தப் பயணம் நடைபெறுகிறது. இதன் தாக்கம் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பிலும் இருக்கிறது.

எனினும், இரு பெரிய அண்டை நாடுகளுக்கு இடையே சமீபத்தில் ஏற்பட்டுள்ள ராஜ்ஜீய ரீதியான நெருக்கம் மேலும் வலுப்பெறுவதற்கு ஜின்பிங்கின் இந்தப் பயணம் சாதகமான சூழலை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பயணம் குறித்து, “2019ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜின்பிங் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம், மோதிக்கு நட்புக் கரம் நீட்டுவதாக அமைந்துள்ளது” என்று ப்ளூம்பெர்க் குறிப்பிட்டுள்ளது.

எனினும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளில் முன்னேற்றம் ஏற்படும் என்று எதிர்பார்ப்பது முன்கூட்டிய ஒன்றாகும் என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. இரு நாடுகளிலும் உள்ள வணிகத்தில் இன்னும் பல சிரமங்கள் நீடிக்கின்றன.

கடுமையான விதிமுறைகள் முதலீடுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதுடன், விசா வழங்குவதில் தாமதம் மற்றும் தொழில்துறை உபகரணங்கள் மீதான கட்டுப்பாடுகளுக்கும் வழிவகுத்துள்ளன.

கல்வான் சம்பவத்திற்குப் பிறகு நிலவும் பதற்றம் குறையுமா?

கடுமையான விதிமுறைகள் முதலீடுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதுடன், விசா வழங்குவதில் தாமதம் மற்றும் தொழில்துறை உபகரணங்கள் மீதான கட்டுப்பாடுகளுக்கும் வழிவகுத்துள்ளன.

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, ஜூன் 2020-ல் சீன மற்றும் இந்திய வீரர்களுக்கு இடையே நடந்த மோதல் குறித்த புகைப்படத்தை சீனா வெளியிட்டது (கோப்புப் படம்)

2020ஆம் ஆண்டு, இந்தியா-சீனா எல்லைக்கு அருகே உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இதற்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் மோசமடைந்தது. இந்த மோதலில் தங்கள் தரப்பில் நான்கு வீரர்கள் மட்டுமே கொல்லப்பட்டதாக சீனா தெரிவித்தது.

இருப்பினும், சமீப ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேம்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டு எஸ்சிஓ கூட்டத்தில் பங்கேற்பதற்காக மோதி சீனாவின் தியான்ஜின் நகருக்குச் சென்ற பிறகு இந்த முன்னேற்றம் ஏற்பட்டது.

அங்கு ரஷ்யா மற்றும் சீன தலைவர்களுடன் அவர் நடத்திய சந்திப்புகள் தலைப்புச் செய்திகளாயின. மோதி மற்றும் ஜின்பிங் ஆகியோருக்கு இடையே இருதரப்பு பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.

அந்த நேரத்தில் அமெரிக்கா இந்தியா மீது 50 சதவீத வரியை விதித்திருந்ததும் இதற்கு ஒரு காரணமாக இருந்தது. அது இந்தியப் பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய பாதிப்பாக அமைந்தது.

டெல்லியைச் சேர்ந்த அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் துணைத் தலைவரும், சர்வதேச விவகார நிபுணருமான ஹர்ஷ் வி பந்த், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நம்பகத்தன்மையற்ற கொள்கைகள், இரு நாடுகளும் தங்களுக்கிடையிலான வேறுபாடுகளைக் காட்டிலும் பொதுவான நலன்களின் அடிப்படையில் பேச்சுவார்த்தை மேசைக்கு வருவதற்கான இடத்தை நிச்சயமாக உருவாக்கியுள்ளதாகக் கூறுகிறார்.

பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் பேசிய ஹர்ஷ் பந்த், “இரு அண்டை நாடுகளுக்கும் ஒருவர் மற்றொருவர் தேவை. அதனால்தான் சமீப காலங்களில் எல்லைப் பிரச்னையில் இரு தரப்பிலும் அணுகுமுறை சற்று மென்மையாகியுள்ளது” என்றார்.

இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இந்த வாரம், முதல் முறையாக உயர்மட்ட ராணுவத் தளபதிகள் நிலையில் கொடி சந்திப்பு நடைபெற்றதாகத் தெரிவித்தார். செப்டம்பர் 6ஆம் தேதி இந்தியத் தரப்பில் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள வாச்சாவிலும், செப்டம்பர் 7ஆம் தேதி சீனத் தரப்பில் உள்ள டாமாயிலும் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

கடந்த ஆண்டு, இந்தியாவும் சீனாவும் நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்கின. சீன வர்த்தகத் துறை நிபுணர்களுக்கான விசா நடைமுறைகளையும் இந்தியா எளிதாக்கியது.

கடந்த ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோதி சீனாவின் தியான்ஜின் நகருக்குச் சென்றபோது ஜின்பிங்கை சந்தித்தார்.

2024ஆம் ஆண்டு, ரஷ்யாவின் கசான் நகரில் பிரிக்ஸ் மாநாடு நடைபெற்றது. அப்போது, பிரதமர் மோதியும் மற்றும் ஜின்பிங்கும் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்தனர்.

2020ஆம் ஆண்டு தொடங்கிய பிரச்னைக்கு தீர்வு காணவும், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுவதற்கான ஒப்பந்தத்தையும் இரு தலைவர்களும் வரவேற்றனர்.

அதே நேரத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் நிலவிய இறுக்கம் தளரத் தொடங்கியதாகக் கருதப்பட்டது.

எனினும், எல்லைப் பிரச்னை அவ்வளவு விரைவாக முடிவுக்கு வரப்போவதில்லை என்றும், அதனை பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னேறவும் முடியாது என்றும் ஹர்ஷ் பந்த் கூறுகிறார்.

அதுகுறித்து அவர் கூறுகையில், “இப்போது இரு தரப்பிலும் பிரச்னை மேலும் தீவிரமடையாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2020ஆம் ஆண்டில் நடந்ததைப் போன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருப்பதுடன், எல்லை தொடர்பான உறவுகளில் நம்பிக்கை ஏற்படுத்தப்பட வேண்டும். இதற்காக வாங் யீ மற்றும் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் ஆகியோருக்கு இடையிலும் ஒரு சந்திப்பு நடைபெற்றது. அதன்பிறகு, தளபதிகள் நிலையிலும் ஒரு சந்திப்பு நடைபெற்றது” என்றார்.

இந்தியா – சீனா இடையிலான 2 முக்கிய பிரச்னைகள்

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு நிச்சயமாக ஒரு மாற்றத்தைச் சந்தித்துள்ளதாக ஹர்ஷ் பந்த் கூறுகிறார். இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் நம்பிக்கைக் குறைபாடும், வர்த்தகப் பற்றாக்குறையும் இன்னும் இரண்டு முக்கியமான பிரச்னைகளாக உள்ளன.

அவரது கூற்றுப்படி, “ஊடகச் செய்திகளின்படி, ஜின்பிங் இந்தப் பயணத்தின்போது 400 பிரதிநிதிகள் கொண்ட மிகப்பெரிய குழுவை அழைத்து வருகிறார். அவர்களில் பெரும்பாலானோர் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்கள்.”

“இதற்கு ஒரு காரணம், கல்வான் சம்பவத்துக்குப் பிறகு, எல்லையில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், அது ஒட்டுமொத்த உறவையும், குறிப்பாக வர்த்தகக் கூட்டாண்மையையும் பாதிக்கும் என்று இந்தியா மிகவும் தெளிவாகக் கூறியதுதான்.”

எல்லையில் பதற்றத்தைக் குறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், பொருளாதார உறவுகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதைப் பார்க்க முடிகிறது.

இந்த ஆண்டு மார்ச் மாதம், கல்வான் பள்ளத்தாக்கு மோதல்களுக்குப் பிறகு விதிக்கப்பட்டிருந்த சீன முதலீடுகள் மீதான சில கட்டுப்பாடுகளை இந்தியா தளர்த்தியது.

ராய்ட்டர்ஸ் வழங்கியுள்ள தகவல்படி, இந்தக் கட்டுப்பாடுகள் மின்னணுவியல், மூலதனப் பொருட்கள் மற்றும் சூரிய மின்கலத் துறைகளை உள்ளடக்கியிருந்தன. குறிப்பிட்ட சில தொழில்களில் இந்திய மற்றும் சீன நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டு முயற்சிகளுக்கான ஒப்புதல்களை விரைவுபடுத்துவது குறித்தும் இந்தியா பரிசீலித்து வருகிறது.

சமீபத்தில், இந்தியாவின் டிக்சன் டெக்னாலஜிஸ் மற்றும் சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ மொபைல் ஆகியவற்றுக்கு இடையிலான ஸ்மார்ட்போன் உற்பத்தி கூட்டு முயற்சி உள்ளிட்ட சில முக்கியத் திட்டங்களுக்கும் இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.

ஆனால், சில முக்கிய முதலீடுகள் மற்றும் திட்டங்கள் இன்னும் தடைகளை எதிர்கொண்டு வருகின்றன.

இந்தியாவின் கடுமையான அதிகரித்த கண்காணிப்பை எதிர்கொண்ட பின்னர், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான முன்மொழியப்பட்ட திட்டங்களை நிறுத்தி வைத்திருந்த பிஓய்டி மற்றும் க்ரேட் வால் மோட்டார்ஸ் போன்ற முக்கிய சீன வாகனத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இந்தத் தளர்வுகள் போதுமானதாக இல்லை என்று இந்திய அரசின் ஆதாரத்தை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த மாதம் கிர்கிஸ்தானில் நடைபெற்ற பிராந்திய மாநாட்டில் ஷி மற்றும் மோதி சந்தித்ததாகவும், இரு நாடுகளும் “எதிரிகள் அல்ல, கூட்டாளிகள். ஒருவரது வளர்ச்சிக்கு மற்றொருவர் அச்சுறுத்தல் அல்ல, வாய்ப்புகள்” என்றும் சீன வெளியுறவு அமைச்சகம் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளது.

உண்மையில், இரு நாடுகளும் அமெரிக்காவுடனான நிலையற்ற உறவுகளால் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றன.

ஹர்ஷ் பந்த் கூறுகையில், “சமீப ஆண்டுகளில் அமெரிக்காவுடனான சீனாவின் உறவு வேகமாக மோசமடைந்துள்ளது. ஐரோப்பாவும் சீனாவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுக்கத் தொடங்கியுள்ளது. சீனா முதன்மையாக ஏற்றுமதியைச் சார்ந்த பொருளாதாரமாக உள்ளது. அதற்கு ஒரு சந்தை தேவை. இந்தியா அதற்கு மிகப்பெரிய சந்தையாக அமையக்கூடும்.”

அவரது கூற்றுப்படி, “இந்தியாவுக்கு உள்ள மிகப்பெரிய பிரச்னை வர்த்தகப் பற்றாக்குறை. இது 100 பில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது. சீனாவில் இந்தியப் பொருட்களுக்கு சந்தை அணுகல் இல்லை. இரண்டாவதாக, உற்பத்தித் துறையில், உத்திசார் துறைகளைத் தவிர, பொருளாதாரக் கூட்டாண்மைகளை அதிகரிக்க வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. “

ஜின்பிங்கின் டெல்லி பயணத்தின்போது, இந்த அனைத்து விவகாரங்களும் இரு தரப்புக்கும் இடையே விவாதிக்கப்படலாம் என்று அவர் கூறுகிறார்.

சீனா என்ன விரும்புகிறது?

ஹர்ஷ் பந்த் கூறுகையில், “சமீப ஆண்டுகளில் அமெரிக்காவுடனான சீனாவின் உறவு வேகமாக மோசமடைந்துள்ளது. ஐரோப்பாவும் சீனாவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுக்கத் தொடங்கியுள்ளது. சீனா முதன்மையாக ஏற்றுமதியைச் சார்ந்த பொருளாதாரமாக உள்ளது. அதற்கு ஒரு சந்தை தேவை. இந்தியா அதற்கு மிகப்பெரிய சந்தையாக அமையக்கூடும்.”

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சீனா முதன்மையாக ஏற்றுமதியைச் சார்ந்த ஒரு பொருளாதாரம் ஆகும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடனான பதற்றங்களுக்கு மத்தியில் அது புதிய சந்தைகளைத் தேடி வருகிறது.

“சீனா நிச்சயமாக உறவுகளை மேம்படுத்த விரும்புகிறது. ஆனால், உறவுகளை மேம்படுத்துவதில் இந்தியா உண்மையில் எந்த அளவுக்கு தயாராக உள்ளது என்பதைப் பார்க்க விரும்புகிறோம்” என்று ராய்ட்டர்ஸிடம் ஷாங்காயின் ஃபுடான் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய நிபுணரும், புது டெல்லியில் உள்ள சீனத் தூதரகத்தின் முன்னாள் தூதருமான லின் மின்வாங் கூறினார்.

மிகப்பெரிய அளவில் எந்த மாற்றமும் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்று அவர் சுட்டிக்காட்டினார்.

ஹர்ஷ் பந்த் கூறுகையில், “சீனாவிடம் பொருளாதார வலிமை உள்ளது. இரு நாடுகளும் அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குறிப்பாக தற்போது, நம்பகமான கூட்டாளியாக மாறுவதற்கு அந்த வலிமையைப் பயன்படுத்துவதற்கான நல்ல வாய்ப்பு சீனாவுக்கு உள்ளது”என்றார்.

அவரது கூற்றுப்படி, “பொருளாதாரப் பிரச்னைகளில் கவனம் செலுத்துவது இரு தரப்பினருக்கும் நலன் பயக்கும். ஆனால், இது அவ்வளவு எளிதானது அல்ல. வர்த்தகப் பற்றாக்குறையைத் தவிர, சந்தை அணுகல், முதலீடு மற்றும் வர்த்தகக் கட்டுப்பாடுகள் தொடர்பான நிலைப்பாடுகளையும் தெளிவுபடுத்த வேண்டியிருக்கும். இந்தப் பிரச்னைகளை இரு தரப்பினரும் எந்த அளவுக்கு தீர்க்க முடியும் என்பது முக்கியமானது.”

சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ், கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஒரு கட்டுரையில், 18ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள் மேம்படும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தது.

அந்த நாளிதழ், “2025-26 நிதியாண்டில் இருதரப்பு வர்த்தகம் 151.1 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. இதன் மூலம் சீனா மீண்டும் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாகியுள்ளது. இருதரப்பு உறவுகளில் ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும், இந்த ஊக்கமளிக்கும் புள்ளிவிவரம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள நிலையான முன்னேற்றத்தையும், இரு பொருளாதாரங்களின் தொடர்ச்சியான வலுவான வளர்ச்சியையும் பிரதிபலிக்கிறது” என்று எழுதியுள்ளது.

“இருதரப்பு வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் அவர்கள் இணைந்து வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளனர்”என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தீர்க்கப்பட வேண்டிய வணிகத் தடைகள்

சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ், கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஒரு கட்டுரையில், 18ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள் மேம்படும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தது.

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரத் தடைகளை அகற்றுவதே சவாலாகும் (கோப்புப் படம்).

ஆனால், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பல்வேறு முன்னேற்றங்களும், நெருக்கமும் ஏற்பட்டுள்ள போதிலும், பொருளாதார ரீதியாக இரு நாடுகளுக்கும் இடையே இன்னும் சில தடைகள் நீடிக்கின்றன.

கடந்த வாரம் ராய்ட்டர்ஸ் வெளியிட்ட செய்தியில், சீனாவின் ஆன்ட் குழுமத்துடன் நிறுவனத்துடன் இணைந்த அலிபே நிறுவனம், இந்தியாவின் உடனடி பணப்பரிவர்த்தனை முறையுடன் ஒருங்கிணைய முன்வைத்திருந்த திட்டத்தை தேசியப் பாதுகாப்பு காரணங்களைக் குறிப்பிட்டு புது டெல்லி நிராகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

மற்றொரு ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, சீன மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான சியோமிக்கு எதிராக தீவிர மோசடி விசாரணை அலுவலகம் பரிந்துரைத்துள்ள விசாரணையை மேற்கொள்வது குறித்தும் இந்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இந்தியாவில் அந்நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளில் ஏற்பட்டதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் அந்நிய முதலீட்டுச் சட்டங்களை மீறியதாகக் கூறப்படும் விவகாரங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனினும், சட்டங்களைப் பின்பற்றி வருவதாக சியோமி தெரிவித்துள்ளது.

மறுபுறம், சீனாவும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்தியத் தரப்பைச் சேர்ந்தவர்களை மேற்கோள்காட்டிய ராய்ட்டர்ஸ் , துறைமுக உபகரணங்கள், சூரிய மின்சக்தி தகடுகள் மற்றும் மொபைல் போன் உற்பத்தி உபகரணங்கள் உள்ளிட்ட முக்கியமான தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்புப் பொருட்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய வேண்டாம் என்று சீன அதிகாரிகள் அந்நாட்டு நிறுவனங்களிடம் கேட்டுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சூரிய மின்சக்தி மற்றும் மின்னணுவியல் போன்ற முக்கியத் துறைகளுக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் உதிரிபாகங்கள் சீன சுங்கத்துறையால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அரசு அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி, சில பெரிய சுரங்கப்பாதை அமைக்கும் இயந்திரங்களை சீனா ஓராண்டுக்கும் மேலாகத் தடுத்து வைத்துள்ளதாகவும் ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

“இரு தரப்பிலும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம். ஆனால், உடனடியாக நிலைமை முழுமையாக மாறிவிடும் என்று தெரியவில்லை. சீனாவின் பொருளாதார வலிமையால் இந்தியா பயனடைய விரும்புகிறது. சீன முதலீடுகளை ஈர்ப்பதற்கான முயற்சிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்தும் இந்தியாவில் விவாதம் நடைபெற்றுள்ளது”என்கிறார் ஹர்ஷ் பந்த்.

அதுகுறித்துப் பேசிய அவர், “இந்தியாவுடனான பொருளாதார விவகாரங்களில் சீனா தீவிரமாக இருப்பதை வெளிப்படுத்த வேண்டும். இதற்கு ஓர் உதாரணமாக, இந்தியாவுக்கு சந்தை அணுகலை வழங்குவதைச் சொல்லலாம்.”

குளோபல் டைம்ஸ் தனது கட்டுரையில், “இந்தியாவின் வேளாண் பொருட்கள், கனிம வளங்கள் மற்றும் குறிப்பிட்ட சில நுகர்வோர் பொருட்கள் சீனச் சந்தைக்குள் நுழைவதற்கு மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன. இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான வர்த்தக ஒத்துழைப்பு, இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தித் துறைக்கு பயனளிக்கும்” என்று எழுதியுள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Source link