தர்மபுரி: ”சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை சொல்கிறார் ஸ்டாலின். தமிழகத்தில் பாலியல் சீண்டல் நடக்காத நாளே இல்லை,” என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பேசினார்.
தர்மபுரி, பாலக்கோடு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் பேசியதாவது: இபிஎஸ் பாஜவுக்கு அடிமை என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். நாங்கள் மட்டுமல்ல கூட்டணி கட்சிகள் கூட அடிமை கிடையாது.
நியாயத்துக்காக போராடுவோம். தமிழக மக்களுக்கு எதிராக எந்த வடிவத்தில் வந்தாலும் அனுமதிக்க மாட்டோம். அதனை எதிர்ப்போம். உங்களை போல் கூஜா தூக்கும் கட்சி அல்ல அதிமுக.வெளியேபேசுவது ஒன்று, செய்வது ஒன்று இரட்டை வேடம் போடும் கட்சிதிமுக. நாங்கள் எப்போதும் அடிமை கிடையாது. காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அமல்படுத்த வலியுறுத்தி , பாஜ கூட்டணியில் அங்கம் வகித்தாலும், பார்லிமென்ட்டை 22நாட்கள் அதிமுக எம்பிக்கள் முடக்கினர். அந்தளவுக்கு திமுக போராடியதா?நீட் தேர்வு ரத்துக்கு திமுக அரசு செய்தது என்ன?
எதிர்க்கட்சி வந்த போது கருப்புக்கொடி காட்டிய ஸ்டாலின், முதல்வரான பிறகு வெள்ளைக்கொடி வேந்தன் ஆனார்.தமிழகத்தில் பெண்கள் அதிகமாக வேலைக்கு செல்வதாக புதிதாக கண்டுபிடித்தது போல் ஸ்டாலின் சொல்கிறார் . ஆனால், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை சொல்கிறார். தமிழகத்தில் பாலியல் சீண்டல் நடக்காத நாளே இல்லை. பொள்ளாச்சி பாலியல் குற்றம் நடந்த போது விசாரணையை சிபிஐக்கு மாற்றினோம்.
அண்ணாநகர் சிறுமி பாலியல் வழக்கில் குற்றவாளிகளை காப்பாற்ற சுப்ரீம் கோர்ட்டை திமுக அரசு நாடியது. அரசு ஊழியர்களை ஏமாற்றியது திமுக. அனைவரையும் ஏமாற்றியது திமுக.ஸ்டாலின், அறிவிப்பு கொடுத்த பெயர் யாருக்காவது நியாபகம் உள்ளதா? புதிய புதிய பெயரை வைத்து மக்களை ஏமாற்றி ஐந்தாண்டு ஆட்சி செய்த அரசு தொடர வேண்டுமா? இவ்வாறு இபிஎஸ் பேசினார்.
