1988 ஆம் ஆண்டு ஈழத்தில் போர் உச்சகட்டத்தில் இருக்கும் சமயத்தில் அப்போது உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் திரைப்படம் நீளிரா. இலங்கை ராணுவத்துக்கும் தமிழ் ஈழ போராளிகளுக்கும் இடையே போருக்கு நடுவே சென்ற அமைதிப்படை ஏற்படுத்திய தாக்கத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் இந்த நீளிரா திரைப்படம் எந்த அளவு உண்மைக்கு நெருக்கமாக அமைந்திருக்கிறது?
1988 சமயத்தில் ஈழத்தில் ஒரு குடும்பத்தில் திருமண ஏற்பாடுகள் நடைபெறுகிறது. அந்த சமயம் அந்த வீட்டினுள் இந்தியாவை சேர்ந்த அமைதிப்படை உள்ளே புகுந்து விடுகிறது. அவர்களை எதிர்த்து விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்துகின்றனர். இதில் அந்த வீட்டில் இருக்கும் நபர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. விடிந்தால் திருமணம். இரவு முழுவதும் தாக்குதல்கள் நீள திருமணம் காலை அரங்கேறியதா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை
ஈழ மக்களின் வாழ்க்கை போராட்டங்களை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் இப்படம் எளிய மனிதர்களின் வலியையும், வேதனைகளையும், போரால் அவர்களின் அடிப்படை வாழ்க்கை எந்த அளவு ஸ்தம்பித்தது அதனுள் அவர்கள் எவ்வளவு தூரம் சிக்கி தவித்து துயரத்தை சந்தித்தனர் போன்ற உண்மைகளையும் அப்படியே வெளிச்சம் போட்டு காட்டி அதன் மூலம் உண்மைக்கு நெருக்கமான ஒரு கதையை கொடுத்து ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் சோமீதரன். அந்த காலகட்டத்தில் தமிழ் ஈழ போராளிகள் ஒரு பக்கம் போராட இலங்கை ராணுவம் ஒரு பக்கம் ஒடுக்க, மற்றொரு பக்கம் இந்தியாவில் இருந்து சென்ற வட மாநில குழுவை சேர்ந்த அமைதிப்படைகள் போருக்கு நடுவே சமாதானம் செய்ய சென்ற இடத்தில் நிகழ்த்திய அட்டூழியங்களை எந்த அளவு உண்மைக்கு நெருக்கமாகவும் அதேசமயம் அதை தணிக்கையில் தடை செய்யாத வகையில் இலை மறை காய் மறையாக சொல்ல முடியுமோ அந்த அளவு சிறப்பான முறையில் ஒரு படத்தை கொடுத்து வரவேற்பை பெற்று இருக்கிறார் இயக்குநர் சோமீதரன்.
கமர்ஷியலாக விறுவிறுப்பு நிறைந்த படமாக இல்லாமல் இருந்தாலும் பார்ப்பவர்களுக்கு உண்மைகளை சிறப்பான முறையில் அனைத்து தரப்பு ரசிகர்களும் குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்த்து புரிந்து கொள்ளும் படியான அழகான படமாக இத்திரைப்படத்தை கொடுத்து முத்திரை பதித்திருக்கிறார். ஒவ்வொரு எளிய மனிதர்களின் குமுறல்களையும் சிறப்பான முறையில் வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார். குறிப்பாக இலங்கைத் தமிழர்களின் ஆதங்கத்தை சிறப்பான முறையில் வெளிப்படுத்தியுள்ளார். இதை ஒரு கமர்ஷியல் படமாக இல்லாமல் உண்மைக்கு நெருக்கமான படமாக பார்க்கும் பட்சத்தில் சிறப்பான படமாக அமைந்து இருக்கிறது.
நவீன் சந்திரா நாயகனாக சிறப்பான நடிப்பை வழக்கம்போல் வெளிப்படுத்தி இருக்கிறார். அமைதிப்படை வீரராக வரும் அவர் இரண்டுக்கும் நடுவே நின்று கொண்டு இடதுக்கும் வலதுக்குமான அரசியலுக்கு நடுவே சிக்கித் தவிக்கும் இளைஞராக முக்கிய பங்களிப்பை நிறைவாக கொடுத்திருக்கிறார். மற்றொரு நாயகனாக விடுதலைப் புலிகளின் ஒருவராக நடித்திருக்கும் சனந்த் சில காட்சிகளே வந்தாலும் கவர்கிறார். யாதுமாகி படப் புகழ் ரூபா மற்றும் அவரது குடும்பத்தார் ஆகியோர் அனைவரும் இலங்கைத் தமிழர்களின் வலி, போரால் ஏற்பட்ட அச்சுறுத்தல்களின் பாதிப்பு, அடிப்படை தேவைகளை கூட பெற முடியாத சூழல் ஆகியவைகளை தங்கள் நடிப்பின் மூலம் சிறப்பாக வெளிப்படுத்தி படத்திற்கு உயிர் கொடுத்திருக்கின்றனர். அதேபோல் படத்தில் நடித்த மற்ற அனைத்து நடிகர்களுமே அந்தந்த கதாபாத்திரமாகவே மாறி கவர்ந்திருக்கின்றனர்.
செல்வரத்தினம் பிரதீபன் தன்னுடைய ஒளிப்பதிவில் இலங்கையை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார். அந்த காலப் போர் சமயத்தில் இடங்கள் எப்படி இருக்கும் என்பதை சிறப்பான முறையில் காட்சிப்படுத்தி படத்தோடு பார்ப்பவர்களை ஒன்ற வைத்திருக்கிறார். கே இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை சிறப்பாக அமைந்திருக்கிறது ஒரு கலைப்படமாக இல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும்படி சற்றே ஜனரஞ்சகமான முறையில் திரைக்கதையை அமைக்கப்பட்டிருந்தால் இப்படம் இன்னும் ஒரு சிறப்பு படமாக அமைந்திருக்கும்.
நீளிரா – ஏக்கம்!
