போபால்,
மத்தியப்பிரதேசத்தில் காலணி நனைந்துவிடக் கூடாது என்பதற்காக 65 வயது முதியவரின் முதுகில் ஏறி ஓடையை கடந்து சென்ற வருவாய்த்துறை அதிகாரி பணியிடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வருவாய் அதிகாரி ஆய்வு
மத்தியப்பிரதேச மாநிலம் சித்தி மாவட்டம் மாதா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வனவிலங்குகள் தாக்குதலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக பத்வாரி நிலேஷ்நம் தேவ் என்ற வருவாய் அதிகாரி அப்பகுதிக்கு கள ஆய்வுக்குச் சென்றுள்ளார்.
முதுகில் சவாரி
அப்போது ஆய்வு செய்ய வேண்டிய இடத்துக்குச் செல்லும் வழியில் சிறிய ஓடை குறுக்கிட்டுள்ளது. ஓடையை கடக்கும்போது தனது காலணிகள் நனைந்துவிடக் கூடாது என்பதற்காக, 65 வயது முதியவரான லால்வாகேவத் என்பவரின் முதுகில் ஏறி மறுபுறம் சென்றதாக கூறப்படுகிறது. அதிகாரியின் இந்த செயலை அங்கிருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். சுமார் 45 விநாடிகள் கொண்ட அந்த காணொலி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி, பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
பணியிடைநீக்கம்
இதையடுத்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் அடிப்படையில், உதவிக்கோட்ட நடுவர் பிரியா பதக் உத்தரவின்பேரில் வருவாய் அதிகாரி நிலேஷ்நம் தேவ் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். முதியவரை தனது காலணி நனையாமல் இருப்பதற்காக சுமக்கச் செய்த அதிகாரியின் செயலுக்கு கிராம மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
