ஈரான் – அமெரிக்கா இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. ஈரானும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தளவாடங்கள் மீது பதில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் சம்பவங்கள் ஒரு மதத்திற்கும் மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போர் பதற்றம் காரணமாக, ஹார்மோஸ் நீரிணை பாதையை ஈரான் மூடியுள்ளது. இதனால், கச்சா எண்ணெய் வரத்து தடைப்பட்டு, உலக அளவில் பல்வேறு நாடுகள் எரிபொருள் தட்டுப்பாட்டை சந்தித்து வருகின்றன.
இதனால், இந்த ஹார்மோஸ் நீரிணையை மீட்க உலக நாடுகள் கைகோர்க்க வேண்டும் என அமெரிக்க அதிபர் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், இந்த கோரிக்கையை எந்த உலக நாடுகளும் ஏற்கவில்லை. இதனால், விரக்தியடைந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கச்சா எண்ணெய் தேவை உள்ளவர்கள் ஹார்மோஸ் நீரிணையில் இருந்து நீங்களே உங்கள் கப்பல்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று தெரிவித்திருந்தார்.
அதே போல, கடந்த சில நாட்களாகவே ஈரானுடன் சுமுகமான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த போரை முடிவிற்குக் கொண்டுவருவோம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு வெளியிட்டு வருகிறார். ஆனால், எதிர்த் தரப்பில் ஈரான் தங்களின் நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை இந்த போர் தொடரும் என்று தெரிவித்துள்ளது.
இதனிடையே, நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ” ஈரானுடனான போரிலிருந்து அமெரிக்கா விரைவில் வெளியேறும். நாங்கள் இலக்குகளை நெருங்கிவிட்டோம். அதனால், போரை இன்னும் வேகமாக முடிவிற்குக் கொண்டுவருவோம். அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு ஈரானைக் கடுமையாகத் தாக்கப் போகிறோம். ஹார்மோஸ் நீரிணையைக் காக்க, மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா உதவும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், “ஈரானின் ராணுவ திறனைக் குறைத்து மதிப்பிடும் அமெரிக்காவும், இஸ்ரேலும் பேரழிவுகரமான தாக்குதல்களை எதிர்நோக்கிக் காத்திருக்க வேண்டும். அமெரிக்கா அவமானப்பட்டு, இழி நிலையடைந்து, நிரந்தர வருத்தத்திற்கு ஆளாகி, மண்டியிட்டுச் சரணடையும் வரை இந்த போர் தொடரும்” என ஈரான் ராணுவம் அமெரிக்காவிற்குப் பதிலடி கொடுத்துள்ளது.
