2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாக பரப்புரையில் இறங்கியுள்ளன. இதனிடையே, தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி இருக்கிறது. விடுமுறை நாட்கள் போக வேட்புமனு தாக்கல் செய்ய 4 நாட்களே இருப்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேபோல் பிரச்சாரத்திலும் தீவிரம் காட்டி வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் தீவிரமாக அமலுக்கு வந்துள்ள நிலையில் பல்வேறு இடங்களில் தீவிர சோதனைகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கோவை கொடிசியா மைதானத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரது உரையில், ”கோவையில் மக்கள் ஒன்று கூடி மகிழ செம்மொழி பூங்கா, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் உலகத்தரத்தில் ஹாக்கி மைதானம். அதே போல ஆற்றுப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வரை உயர்மட்ட மேம்பாலம். இருகூர்-பீளமேடு ரயில் நிலையங்களுக்கிடையே சாலை மேம்பாலம். பில்லூர் குடிநீர் திட்ட பணிகள். கோவை விளாங்குறிச்சியில் எல்காட் தகவல் தொழில்நுட்ப மையம். இப்படி கோவையில் திராவிட மாடலின் சாதனை சரித்திரம் தொடர திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கு உங்கள் வாக்குகளை நீங்கள் வழங்க வேண்டும்.
2021 தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் மட்டுமல்ல கொடுக்காத பல்வேறு திட்டங்களையும் நிறைவேற்றி காட்டிவிட்டு உங்கள் முன் இன்று நான் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறேன். எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் செய்த சாதனைகளை நான் சொன்னது போல பட்டியலிட்டு சொல்ல முடியுமா? அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பி அடித்து விட்டோம் என்று வாய் கூசாமல் எடப்பாடி பழனிசாமி பொய் சொல்கிறார் .10 ஆண்டு ஆட்சியில் இருந்த அதிமுக சாதனைகள், திட்டங்கள் என்று பட்டியல் போட அவரிடம் எதுவும் இல்லை. இந்த கஷ்டம் பழனிசாமியை விட அவருடைய ஓனர் இருக்கிறாரே பிரதமர் மோடி அவருக்கு இன்னு அதிகம்.
காரணம் மோடியாலும் தமிழ்நாட்டுக்கு செய்த சிறப்பு திட்டங்கள் என்று எதையும் சொல்ல முடியாது. பெரும்பாலும் வெளிநாடுகளில் வாழ்கின்ற பிரதமர் மோடி தேர்தல் வந்துவிட்டால் போதும், தேர்தல் சீசன் காரணத்தால் இப்பொழுது அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருகிறார். இப்பொழுது கூட வரும் நான்காம் தேதி சென்னையில் ரோட்ஷோ பண்ண வருகிறாராம். செய்தி வந்தது. இதனால் யார் மகிழ்ச்சி அடைகிறார்களோ இல்லையோ நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். திமுக காரர்களுக்கு இப்போ செம்ம குஷி. ஏனென்றால் கடந்த முறை 2024 தேர்தலுக்கும் இப்படித்தான் பிரதமர் மோடி சென்னையில் ரோடு ஷோ பண்ணினார். 40க்கு 40 தொகுதிகளிலும் முழு வெற்றி பெற்றோம். இப்பொழுதும் அடித்து சொல்கிறேன் அவர் வந்தால் 200 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்கை நாம் தொடுவது உறுதியாகிவிடும். மோடியும், அமித்ஷாவும் எத்தனை முறை வருகிறார்களோ நம்முடைய வெற்றியின் மார்ஜின் கூடிக்கொண்டே போகிறது” என்றார்.
