மகளிர் ஆசியக் கோப்பை 2026 தொடர், இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. முதல் அரையிறுதிப் போட்டியில், வங்கதேச மகளிர் அணிக்கு எதிராக இந்திய மகளிர் அணி வென்று, பைனலுக்கு முனேற்றிய நிலையில், 2ஆவது அரையிறுதியில் இலங்கை மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர் அணியும் மோதின. இப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
பாகிஸ்தான் இன்னிங்ஸ்: முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் மகளிர் அணியில், டாப் ஆர்டர் பேட்டர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஓபனர் முனிபா அலி 8 பந்தில் 2 ரன்களை அடித்த நிலையில், மற்றொரு ஓபனர் ஷவால் ஜுல்பிகர் 16 பந்தில் 24 ரன்களை எடுத்து அவுட் ஆனார்.
அடுத்து, ஒன்டவுன் பேட்டர் குல் பெரோசா 32 பந்தில் 21 ரன்களை மட்டும் எடுத்து சொதப்பினார். ஆயுஷா ஜபார் 7 (8), சதாப் ஷமாஸ் 8 (11) ஆகியோரும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில், இறுதிக் கட்டத்தில், கேப்டன் பாத்திமா ஷனா 36 பதுகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 47 ரன்களை அடித்து அசத்தினார். மேலும், டுபா ஹஸ்ஸனும் 10 பந்தில் 12 ரன்களை எடுத்ததால், பாகிஸ்தான் மகளிர் அணி, 20 ஓவர்களில் 130/5 ரன்களை சேர்த்தது.
இலங்கை அணிக் கேப்டன் சமிந்து அட்டப்பட்டு 4 ஓவர்களில் 24 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை எடுத்தார். சமுடி பிரபோடா 4 ஓவர்களில் 25 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
இலங்கை இன்னிங்ஸ்: இலக்கை துரத்திக் களமிறங்கிய இலங்கை மகளிர் அணி, துவக்கத்தில் படுமோசமாக சொநப்பியது. கேப்டன் சமிந்து அட்டப்பட்டு 5 (6), இமிஷா துலானி 24 (21), சஞ்சனா கவின்டி 0 (1), ஹாசினி பெரேரா 3 (8) ஆகியோர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் அவுட் ஆனார்கள். இதனால், ஒரு கட்டத்தில், இலங்கை மகளிர் அணி 6.2 ஓவர்களில் 33 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
பிறகு, இறுதிக் கட்டத்தில் ஹர்ஷிதா 31 பந்துகளில் 36 ரன்களையும், கவிஷா தில்ஹரி 33 பந்தில் 33 ரன்களை எடுத்து, அணியை வெற்றிபாதை நோக்கி அழைத்துச் சென்றனர். இறுதியில், நிலாக்ஷிகா சில்வா 18 (10), கௌஷனி 10 (4) ஆகியோர் களத்தில் இருந்தபோது, இலங்கை மகளிர் அணி, 18.4 ஓவர்கள் முடிவில் 134/6 ரன்களை எடுத்து, 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்று பைனலுக்கு முன்னேறியது.
பாகிஸ்தான் மகளிர் அணிக் கேப்டன் பாத்திமா சனா 3.4 ஓவர்களில் 38 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
இப்படி, பாகிஸ்தான் மகளிர் அணிக் கேப்டன் பாத்திமா சனா பேட்டிங்கில் 36 பந்துகளில் 47* ரன்களையும், பந்துவீச்சில் 4 விக்கெட்களையும் கைப்பற்றியதால், ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது.
அரையிறுதியில் வென்ற இலங்கை மகளிர் அணி, பைனலில் இந்திய மகளிர் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இப்போட்டி, வரும் செப்டம்பர் 13ஆம் தேதி, இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
