பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடி எனும் சிறிய கிராமத்தில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தவர் சாலமன் பாப்பையா. கல்வியின் மீது கொண்ட தீராத பற்றால் உயர்ந்தவர், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். வெறும் வகுப்பறையோடு தனது தமிழ்ப் பணியைச் சுருக்கிக் கொள்ளாமல், பட்டிமன்றக் கலைக்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுத்தார்.
எளிய தமிழில், சிரிக்க வைத்த ஜாம்பவான்
சாதாரண மக்களையும் சென்றடையும் எளிய தமிழில், சிரிக்க வைப்பதோடு நின்றுவிடாமல் சிந்திக்கவும் தூண்டும் வகையில் பட்டிமன்றங்களை நடத்திப் புகழ்பெற்றார். இவரது கம்பீரமான குரலும், “அடடா…” என்ற சொல்லாட்சியும் பட்டிமன்ற மேடைகளின் தனித்துவ அடையாளங்களாக மாறின. எழுத்தாளர், பதிப்பாசிரியர், நடிகர் எனப் பன்முகம் கொண்ட இவர், தமிழ் மொழிக்கு ஆற்றிய ஒப்பற்ற சேவையைப் பாராட்டி 2021-ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கௌரவித்தது.
உடல்நலக்குறைவால் உயிரிழப்பு
மதுரை ஞானஒளிவுபுரத்தில் வசித்து வந்த அவர், அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்திருந்தார். இருப்பினும் வயது மூப்பின் காரணமாகத் தனது 90-வது வயதில் இயற்கை எய்தினார். அவரது மறைவுச் செய்தி அறிந்தவுடன் அரசியல் தலைவர்கள், திரை உலகப் பிரபலங்கள், இலக்கியவாதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் தங்களது ஆழந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இன்று இறுதிச்சடங்கு
தற்போது மதுரை ஞானஒளிவுபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் சான்றோர்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. “தனது மறைவுக்குப் பிறகு உடலைத் தகனம் செய்ய வேண்டும்” என்று அவர் குடும்பத்தினரிடம் முன்னரே விருப்பம் தெரிவித்திருந்தார். அவரது விருப்பப்படியே, இன்று காலை 10 மணி முதல் 12 மணிக்குள் மதுரை தத்தனேரி மின் மயானத்தில் இறுதிச்சடங்குகள் நடைபெற்று, உடல் தகனம் செய்யப்பட உள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே அவரது உடலுக்கு அரசு மரியாதை வழங்க வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து அறிவிப்பு தமிழக அரசு இன்னும் சில நேரங்களில் வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
