சென்னை : 'கைதிகளின் தண்டனை குறைப்பு மற்றும் முன்கூட்டி விடுதலை வழங்கும் விவகாரங்களில், அமைச்சரவை முடிவுக்கு,

சென்னை : ‘கைதிகளின் தண்டனை குறைப்பு மற்றும் முன்கூட்டி விடுதலை வழங்கும் விவகாரங்களில், அமைச்சரவை முடிவுக்கு, கவர்னர் கட்டுப்பட்டவர்’ என, சென்னை உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை மாணவர் நாவரசு கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்ற ஜான் டேவிட்டை, முன்கூட்டியே விடுதலை செய்யும்படி தமிழக அரசு பரிந்துரை செய்தும், அமைச்சரவையின் முடிவை, கவர்னர் நிராகரித்தார். இதேபோல், பலரின் தண்டனை குறைப்பு, முன்கூட்டி விடுதலை தொடர்பாக, அரசின் பரிந்துரையை, கவர்னர் நிராகரித்தார்.

இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வில், கடந்த ஆண்டு ஆகஸ்டில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘மாநில அரசின் பரிந்துரையை நிராகரிக்க, கவர்னருக்கு அதிகாரம் உள்ளது என, உயர் நீதிமன்றத்தின் ஒரு அமர்வும், இந்த விஷயத்தில் கவர்னர் சுயமாக செயல்பட முடியாது; அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட வேண்டும் என, மற்றொரு அமர்வும், இரு வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளன’ என்று, வழக்கு தொடர்ந்த மனுதாரர்கள் மற்றும் அரசு தரப்பில் சுட்டி காட்டப்பட்டது.

இந்த இரு அமர்வுகள், இரு வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளதால், முன்கூட்டியே விடுதலை செய்வது, தண்டனை குறைப்பு வழங்குவது போன்ற விஷயங்களில், அமைச்சரவை முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட வேண்டுமா என்பது குறித்தும், நிராகரிப்பதற்கோ அல்லது ஏற்பதற்கோ கவர்னருக்கு அதிகாரம் உள்ளதா என்பது குறித்தும் விசாரிக்க, மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வின் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

அதன்படி, இவ்விவகாரம் தொடர்பான ஒன்பது வழக்குகளை, நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ஜி.கே.இளந்திரையன், சுந்தர்மோகன் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:தண்டனை குறைப்பு, முன்கூட்டியே விடுதலை செய்தல் தொடர்பான விவகாரங்களில், அரசியலமைப்பின் 161 பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்தும்போது, கவர்னர் அமைச்சரவையின் ஆலோசனைக்கு கட்டுப்பட்டவராவார். அமைச்சரவையின் ஆலோசனை, பரிந்துரை கவர்னருக்கு ஏற்புடையதாக உள்ளதோ, இல்லையோ என்பது, இங்கு பொருட்டல்ல. மேலும் எத்தகைய சூழ்நிலையிலும், இந்த விஷயத்தில் கவர்னர் சுயமாக செயல்பட முடியாது; அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட்டவராவர். ஏற்கனவே, இவ்விவகாரத்தில், உச்ச நீதிமன்ற ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வும், ஐந்து நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வும் தெளிவுபடுத்தி உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link