தர்மபுரி : ”கருணாநிதியின் இறுதி காலத்தில், ஸ்டாலின் அவரை கைதியாக தான் வைத்திருந்தார்,” என, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜா ஆடியோவை சுட்டிக்காட்டி, அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் விமர்சனம் செய்தார்.
தர்மபுரியில், அதிமுக வேட்பாளர்கள் பாலக்கோடு அன்பழகன், பாப்பிரெட்டிபட்டி மரகதம், அரூர் சம்பத்குமார் மற்றும், பாமக வேட்பாளர்கள் தர்மபுரி சவுமியா, பென்னாகரம் செல்வம் ஆகியோரை ஆதரித்து, அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் பேசியதாவது: தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் தினந்தோறும் நடக்கிறது. இதை கட்டுபடுத்த திமுக அரசு தவறிவிட்டது. ஐந்தாண்டுகளில் திமுக ஆட்சியில், பெண்களுக்கு எதிராக, 26,651 குற்ற சம்பவங்கள் நடந்துள்ளன.
‘அதிமுக — பாஜவிற்கு அடிமையாக உள்ளது’ என, பேசுகின்றனர். அதிமுக மட்டுமல்ல; எங்கள் கூட்டணியில் உள்ள எந்த கட்சியும், யாருக்கும் அடிமையில்லை. திமுக கூட்டணியில் உள்ளது போல், கூஜா துாக்கும் கட்சி நாங்கள் இல்லை.
பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும்போது, வெள்ளை குடையோடு போனவர் தான் ஸ்டாலின். தற்போது இரட்டை வேடம் போடுகிறார். தமிழகம் முழுதும், கஞ்சா, போதை புழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் குற்ற சம்பவங்களும் அதிகரித்துள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, கிருஷ்ணகிரி நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பழனிசாமி பேசியதாவது:நாங்கள் அதிமுகவை விற்கவில்லை; நீங்கள் தான் காங், கட்சியிடம் உங்கள் கட்சியை விற்பனை செய்துவிட்டீர்கள். காற்றில் கூட ஊழல் செய்த கட்சி திமுக தான். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில், கனிமொழியும், ஆ.ராஜாவும், காங் கட்சி ஆட்சியின் போது கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். கூட்டணியில் இருக்கும் போதே, குற்றம் சுமத்தப்பட்டு திஹார் ஜெயிலில் இருந்தவர்கள், நம்மை பற்றி பேசலாமா?
ஜெயிலில் இருந்தவரின் ஆடியோ பரவி வருகிறது. அதுபற்றி சொல்கிறேன். ராஜா ஆடியோவில், திமுகவில் கனிமொழிக்கு காட்டிய அக்கறையை ராஜாவுக்கு காட்டவில்லை. சமூகநீதி பேசும், திமுகவில் ஜாதிய பாகுபாடு இருக்கிறது. கலைஞர் ‘டிவி’க்கு பணம் போனதை ஒப்புக்கொள்கிறார். ‘கருணாநிதியின் இறுதி காலத்தில், ஸ்டாலின் அவரை கைதியாக தான் வைத்திருந்தார். ஸ்டாலின் கட்சியை கைப்பற்றி விட்டார்’ என்கிறார் ராஜா. ‘கருணாநிதியின் இறுதி காலத்தில், ஸ்டாலினுக்கும், கனிமொழிக்கும் பிரச்னை ஏற்பட்டது. அதனால் தான் இந்த முறை சட்டசபை தேர்தலில் போட்டியிட கனிமொழிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை’ என்கிறார்.
‘ஸ்டாலினுக்கு பெரிய மூளை இருக்குதா? டில்லிக்கு போனால் ஆங்கிலத்தில் கிழித்துவிடுவாரா? கனிமொழியை ஒருநாளும் நம்ப மாட்டார். என்னை எப்போதும் கட்சியில் இருந்து வெளியில் தள்ள முடியாது; என் செல்வாக்கு, என் அறிவு, என் கம்யூனிட்டி என எதையும் தள்ள முடியாது’ என்கிறார். ஸ்டாலின், அவரது அப்பாவை கைதி போல வைத்திருந்தார். சொந்த அப்பாவையே அப்படி வைத்தவர், நாட்டு மக்களை எப்படி வைப்பார். உண்மை செய்தி ராஜா மூலம் வெளியில் வந்துவிட்டது.திமுகவின் இறுதி அத்தியாயத்தை ஸ்டாலின் எழுதுகிறார். அண்ணாதுரை தோற்றுவித்த திமுகவை, கருணாநிதியும், ஸ்டாலினும் கபளீகரம் செய்துவிட்டனர். இவ்வாறு அவர் பேசினார்.
