சென்னை: சென்னை அணி சொந்த மண்ணில் அசத்த காத்திருக்கிறது. ‘சேட்டன்’ சஞ்சு சாம்சன் விளாசினால், இத்தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்யலாம்.
சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் லீக் போட்டியில் (ஏப். 3) சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. ராஜஸ்தானுக்கு எதிரான கடந்த போட்டியில், சென்னை அணி அனைத்து துறைகளிலும் சறுக்கியது. சாம்சன், கேப்டன் ருதுராஜ், ஷிவம் துபே ஏமாற்றியதால், 127 ரன்னுக்கு சுருண்டது. சென்னை அணியில் தமிழ் பேசும் ஒரே வீரரான ‘சேட்டன்’ சாம்சன் மீது எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ராஜஸ்தான் அணியில் இருந்து இவரை ‘அன்புடன்’ அழைத்து வந்தனர். சமீபத்திய ‘டி-20’ உலக கோப்பை தொடரில் ‘ஹாட்ரிக்’ அரைசதம் விளாசி, இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல கைகொடுத்தார். இதே போல சென்னை அணிக்காக, உள்ளூர் ரசிகர்கள் முன் சாதிக்க வேண்டும்.
தோனி ஆலோசனை: கால் தசை பிடிப்பால் அவதிப்படும் தோனி, முதல் போட்டிக்காக கவுகாத்தி செல்லவில்லை. சென்னையில் தங்கி இருக்கும் இவர், மைதானத்திற்கு வெளியே இருந்து கேப்டன் ருதுராஜிற்கு உரிய ஆலோசனை வழங்கலாம். பிரவிஸ் (முதுகு வலி) இடம் பெறுவது சந்தேகமாக உள்ளது. ஆயுஷ் மாத்ரே, சர்பராஸ் கான், கார்த்திக் சர்மா உள்ளிட்ட இளம் வீரர்கள் திறமை நிரூபிக்க வேண்டும்.
ராஜஸ்தானின் இளம் வைபவ் சூர்யவன்ஷியை (15 பந்தில் அரைசதம்) கட்டுப்படுத்த முடியாமல் மாட் ஹென்றி, கலீல் அகமது, கம்போஜ், நுார் அகமது உள்ளிட்ட சென்னை பவுலர்கள் தடுமாறினர். இன்று இவர்கள் எழுச்சி பெற வேண்டும்.
கொனாலி நம்பிக்கை: முதல் போட்டியில் குஜராத்தை சாய்த்த பஞ்சாப், வலுவாக உள்ளது. பயிற்சியாளர் பாண்டிங்-கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் சேர்ந்து சிறப்பாக வியூகம் வகுக்கின்றனர். துவக்கத்தில் பிரியான்ஷ், பிரப்சிம்ரன் கைகொடுக்கலாம். கடந்த அறிமுக போட்டியில் கூப்பர் கொனாலி, 44 பந்தில் 72* ரன் விளாசி நம்பிக்கை தந்தார். ‘ஆல்-ரவுண்டர்’ ஸ்டாய்னிஸ், யான்சென் பலம் சேர்க்கின்றனர். பந்துவீச்சில் மிரட்ட அர்ஷ்தீப் சிங், யான்சென், வைஷாக், சகால், ஹர்பிரீத் பிரார் உள்ளனர்.
இதுவரை மோதல்
இரு அணிகளும் 32 முறை மோதின. சென்னை 16, பஞ்சாப் 16ல் வென்று சமபலத்தில் உள்ளன.
* சேப்பாக்கம் மைதானத்தில் 9 முறை மோதின. சென்னை 4, பஞ்சாப் 5ல் வென்றன.
* ஆடுகளம் பேட்டர்களுக்கு சாதகமானது. ‘ஸ்பின்னர்’களுக்கு ஓரளவு கைகொடுக்கும்.
* சென்னையில் (ஏப். 3) மழைக்கு வாய்ப்பு இல்லை.
