ஈரான் ஏவுகணை தாக்குதலில் துபாய் விமான நிலையம் சேதம்

துபாய்: ஈரான் ஏவுகணை தாக்குதலில் துபாய் விமான நிலையம் மற்றும் புகழ்பெற்ற புர்ஜ் அல் அரப் ஹோட்டல் உள்ளிட்டவை சேதமடைந்தன.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்காசிய நாடான ஈரான் மீது நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில், அந்நாட்டின் முக்கிய நகரங்கள் பலத்த சேதமடைந்தன. இதற்கு பதிலடியாக, தன் அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்காவின் விமானப்படை தளங்களை குறிவைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன்களை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது.

இதில், உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான துபாய் சர்வதேச விமான நிலையத்தின் ஒரு முனையம் சேதமடைந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, துபாய் ஊடக பிரிவு அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், ‘துபாய் சர்வதேச விமான நிலையத்தின் ஒரு பகுதி, நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் சேதம் அடைந்தது’ என தெரிவித்துள்ளது. மற்றொரு பதிவில், ‘அபுதாபியில் உள்ள சையத் சர்வதேச விமான நிலையத்தை நோக்கி வந்த ஏவுகணையை இடைமறித்து அழித்தபோது, அதன் எஞ்சிய பாகங்கள் ஜெபல் அலி துறைமுகத்தில் விழுந்ததால், தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.

இவை தவிர, கடந்த 1999ல் ஜுமேரோ கடற்கரைக்கு அப்பால் ஒரு செயற்கை தீவில் திறக்கப்பட்ட புர்ஜ் அல் அரப் ஹோட்டல் துபாயின் அடையாளமாக திகழ்ந்து வருகிறது. இந்த ஹோட்டலும் ஏவுகணை தாக்குதலில் பாதிப்புக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் நடத்திய தாக்குதல் காரணமாக துபாய் மற்றும் அபுதாபி உட்பட பிராந்தியம் முழுதும் விமான சேவைகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமான நிறுவனங்கள் நிறுத்தி வைத்தன.

Source link