மீண்டும் வாய்ப்பை இழந்தது இத்தாலி * உலக கோப்பை கால்பந்தில்…

ஜெனிகா: உலக கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை தொடர்ந்து மூன்றாவது முறையாக இழந்தது இத்தாலி.

‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில், வரும் ஜூன் 11-ஜூலை 19ல் நடக்க உள்ளது. இதற்கான ஐரோப்பா (4), ‘இன்டர் கான்பெடரேஷன்’ (2) பிரிவில் கடைசி கட்ட தகுதிச்சுற்று போட்டிகள் நடந்தன.

ஐரோப்பிய பிரிவில் ஜெனிகாவில் நடந்த போட்டியில் 4 முறை உலக சாம்பியன் ஆன இத்தாலி (1934, 1938, 1982, 2006), போஸ்னியா அண்டு ஹெர்ஸ்கோவினா அணியை, அதன் சொந்தமண்ணில் சந்தித்தது.

இத்தாலி அணிக்கு 15வது நிமிடத்தில் கீன் ஒரு கோல் அடித்தார். 41வது நிமிடம் இத்தாலி வீரர் பஸ்டோனி, முரட்டு ஆட்டத்திற்காக ‘ரெட் கார்டு’ பெற்று வெளியேறினார்.

இதனால் இத்தாலி 10 வீரர்களுடன் விளையாடும் நிலை ஏற்பட்டது. 79 வது நிமிடத்தில் போஸ்னிய வீரர் டபாகோவிச் கோல் அடிக்க, போட்டி 1-1 என சமன் ஆனது. அடுத்து நடந்த கூடுதல் நேரத்திலும் (30 நிமிடம்) இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை.

வெற்றியாளரை நிர்ணயிக்க ‘பெனால்டி ஷூட் அவுட்’ நடந்தது. முதல் 3 வாய்ப்பில் போஸ்னியா 3, இத்தாலி 1ல் கோல் அடித்தன. 4வது வாய்ப்பில் போஸ்னிய வீரர் கியான்லுய்கி கோல் அடிக்க, போஸ்னியா 4-1 என்ற கணக்கில் ‘திரில்’ வெற்றி பெற்றது. உலக கோப்பை கால்பந்து தொடரில் இரண்டாவது முறையாக (2014, 2026) பங்கேற்க தகுதி பெற்றது.

இத்தாலி ‘ஷாக்’

மறுபக்கம் இத்தாலி அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக (2018, 2022, 2026) உலக கோப்பை கால்பந்தில் பங்கேற்க முடியாத சோகத்துடன், வெளியேறியது.

மற்ற போட்டிகளில் சுவீடன் 3-2 என போலந்தை வீழ்த்தியது. துருக்கி அணி 1-0 என கொசோவாவை வென்றது. 2002க்குப் பின் உலக கோப்பை தொடரில் பங்கேற்கிறது. செக் குடியரசு-டென்மார்க் மோதிய போட்டி 2-2 என சமன் ஆனது. பின் ‘பெனால்டி ஷூட் அவுட்டில்’ 3-1 என வென்றது செக் குடியரசு.

ஈராக் 2-1 என பொலிவியாவை வீழ்த்தியது. காங்கோ அணி கூடுதல் நேரத்தில் கோல் அடித்து, 1-0 என ஜமைக்காவை சாய்த்தது. ‘இன்டர் கான்பெடரேஷன்’ பிரிவில் ஈராக், காங்கோ அணிகள் தகுதி பெற்றன.

48 அணிகள்

உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் 48 அணிகள் 12 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெற்ற அணிகள் விபரம்:

1. பிரிவு ‘ஏ’: மெக்சிகோ, தென் ஆப்ரிக்கா, தென் கொரியா, செக் குடியரசு

2. பிரிவு ‘பி’: கனடா, கத்தார், சுவிட்சர்லாந்து, போஸ்னியா

3. பிரிவு ‘சி’: பிரேசில், மொராக்கோ, ஹைதி, ஸ்காட்லாந்து

4. பிரிவு ‘டி’: அமெரிக்கா, பராகுவே, ஆஸ்திரேலியா, துருக்கி

5. பிரிவு ‘இ’: ஜெர்மனி, குராசோ, ஐவரி கோஸ்ட், ஈகுவடார்

6. பிரிவு ‘எப்’: நெதர்லாந்து, ஜப்பான், துனிஷியா, சுவீடன்

7. பிரிவு ‘ஜி’: பெல்ஜியம், எகிப்து, ஈரான், நியூசிலாந்து

8. பிரிவு ‘எச்’: ஸ்பெயின், கேப் வெர்டே, சவுதி அரேபியா, உருகுவே

9. பிரிவு ‘ஐ’: பிரான்ஸ், செனகல், நார்வே, ஈராக்

10. பிரிவு ‘ஜே’: அர்ஜென்டினா, அல்ஜீரியா, ஆஸ்திரியா, ஜோர்டான்

11. பிரிவு ‘கே’: போர்ச்சுகல், கொலம்பியா, உஸ்பெகிஸ்தான், காங்கோ

12. பிரிவு ‘எல்’: இங்கிலாந்து, குரோஷியா, கானா, பனாமா

Source link