ஒருநாள் ஏற்றம்; ஒருநாள் இறக்கம் ஒவ்வொரு நாளும் பதற்றம்

நேற்று காலையில் 1,500 புள்ளிகள் சரிந்த சந்தை, மாலையில் 185 புள்ளிகள் உயர்வில் முடிந்தது ஒரு மிகப்பெரிய ‘யு -டர்ன்’.

ஒரு நாள் ஏற்றம், மற்றொரு நாள் இறக்கம் என்கிற நிலை மாறி, ஒரே நாளில் ஏற்ற இறக்கத்தை சந்திக்கும் சந்தையாக உருவெடுத்திருப்பதை பார்த்து, முதலீட்டாளர்கள் குழப்பம் அடைந்திருக்கிறார்கள்.

இப்படியான பங்குச் சந்தையை முதலீட்டாளர்கள் எப்படி அணுக வேண்டும் என்பது குறித்து ‘பிரைம் இன்வெஸ்டார்’ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீகாந்த் மீனாட்சி கூறியதாவது:

பங்குச் சந்தை என்பது மனித குணங்களால் கட்டமைக்கப்பட்டது என்பதால், திடீர் சரிவும், திடீர் உயர்வும் சாதாரணமான ஒரு விஷயம்.

டிரம்ப் தும்மினால் ஏற்றம், அவர் இருமினால் இறக்கம் என்கிற ரீதியில்தான் தற்போதைய சந்தையின் நடவடிக்கைகள் இருக்கின்றன. இதுமாதிரியான சந்தையை கணிக்க நினைப்பதே தவறு. என்ன செய்வது என்று யோசித் தும் குழம்பாதீர்கள்.

 அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தேவைப்படாத பணம் உங்களிடம் இருந்தால், சந்தை எப்போது சரிந்தாலும் பயமில்லாமல் துணிந்து முதலீடு செய்யுங்கள். ஆனால், மொத்தமாக ஒரே நாளில் முதலீடு செய்யாமல், கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை பிரிக்க வேண்டும். உதாரணமாக, உங்கள் பணத்தை நான்கு பாகங்களாக பிரித்து, ஒவ்வொரு 2 சதவீத வீழ்ச்சியிலும் ஒவ்வொரு பாகத்தை முதலீடு செய்யலாம்

 நீங்கள் 10 ஆண்டுகளுக்கு முதலீடு செய்கிறீர்கள் என்றால், தினசரி மாற்றங்களை கவனிக்காதீர்கள். நேரத்தை கணிப்பதை விட, சந்தையில் எவ்வளவு காலம் இருக்கிறீர்கள் என்பதே லாபத்தை தீர்மானிக்கும்

 தற்போது சந்தை 13 சதவீதத்துக்கு மேல் சரிவை சந்தித்துள்ளது. செய்திகளில் எல்லாம் சரிவு என்றே பேசப்படுகிறது. இதை தவிர முதலீடு செய்ய சிறந்த நேரம் கிடைக்கவே கிடைக்காது. இந்த சூழலில் தரமான பங்குகளை பார்த்து முதலீடு செய்வதுதான் முதலீட்டாளர்களின் மிக முக்கியமான வேலை

 சந்தை உயர்ந்தாலும், சரிந்தாலும், நீங்கள் முதலீடு செய்துள்ள நிறுவனத்தின் லாபம் மற்றும் வளர்ச்சி சரியாக இருக்கிறதா என்பதை மட்டும் கவனியுங்கள். காலையில் சரிவை பார்த்து பயந்து விற்காமல், அமைதியாக இருப்பதே ஒரு சிறந்த முதலீட்டாள ரின் அடையாளம். சுருக்கமாக சொன்னால், சந்தை சில நேரங்களில் காரணமே இல்லாமல்கூட தள்ளாடலாம். ஆனால் நீண்ட கால அடிப்படையில் ஏற்றத்தின் பாதையில் பயணிக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சரிந்து மீண்ட ‘பேங்க் நிப்டி’ அன்னிய செலாவணி சந்தையில் நிலவும் ஊக வணிகத்தை குறைக்க ரிசர்வ் வங்கி கொண்டு வந்த கடும் கட்டுப்பாடுகளால், வங்கிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படலாம் என்ற அச்சம் முதலீட்டாளர்களிடையே எழுந்தது. இதன் விளைவாக, ‘நிப்டி பேங்க்’ குறியீடு கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு நேற்று சரிவை கண்டது. வர்த்தக துவக்கத்தில் பலத்த சரிவுடன் ஆரம்பித்து, ஒரு கட்டத்தில் 2.9 சதவீதம் வரை வீழ்ந்து 49,954 புள்ளிகளை தொட்டது. இது ஏப்., 2025க்கு பிறகு காணப்பட்ட மிக மோசமான சரிவாகும். இருப்பினும், வர்த்தக முடிவில் 0.19 சதவீதம் உயர்ந்து 51,549 புள்ளிகளில் நிலைபெற்றது.

Source link