தமிழ்நாடு அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவையர் உள்ளிட்டோருக்கான மாதாந்திர ஓய்வூதியம் வரவு வைக்கப்படுவதில் ஏற்படும் தாமதம் குறித்து பயனாளிகள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 12 வகையான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் மொத்தம் 35.37 லட்சம் பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர். இதில் சுமார் 15.56 லட்சம் பயனாளிகளுக்கு ஆகஸ்ட் மாதத்திற்கான (செப்டம்பரில் வழங்கப்படும்) ஓய்வூதியத் தொகை ஏற்கெனவே வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், மத்திய அரசின் நிதிப் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் இந்திரா காந்தி தேசிய முதியோர், விதவை மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டங்களின் கீழ் உள்ள 19.20 லட்சம் பயனாளிகளுக்கு, நடப்பு மாதம் முதல் ‘எஸ்என்ஏ-ஸ்பர்ஷ்’ (SNA-SPARSH) என்ற புதிய நிதிப் பரிவர்த்தனை தளம் வாயிலாக நிதி வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மத்திய அரசு அலுவலகங்களுக்கு செப்டம்பர் 11 முதல் 14 வரை தொடர் விடுமுறை என்பதால், மத்திய அரசின் பங்களிப்புத் தொகைக்கான ஒப்புதல் பெறுவதில் நிர்வாக ரீதியாக சிறு தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, செப்டம்பர் 14-ஆம் தேதிக்குப் பிறகு விடுபட்ட அனைவருக்கும் ஓய்வூதியத் தொகை முறையாக வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும் என்பதால் பொதுமக்கள் கலக்கமடைய வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடற்பயிற்சி செய்கிறீர்களா? இளைஞர்களை தாக்கும் நுரையீரல் புற்றுநோய்!. கவனிக்க வேண்டிய அறிகுறிகள்!
