புதுடில்லி: மேற்காசிய போர் காரணமாக ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு, நிச்சயமற்ற சந்தை நிலவரம் காரணமாக, நாட்டின் தனியார் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த மாதம் சரிவு கண்டது.
மாதந்தோறும் வெளியிடப்படும் எச்.எஸ்.பி.சி., வங்கியின் தயாரிப்பு துறை பி.எம்.ஐ., குறியீட்டு அறிக்கையின் மார்ச் மாதத்துக்கான தரவுகளில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த பிப்., மாதத்தில், 56.90 புள்ளிகளாக இருந்த தயாரிப்பு துறை பி.எம்.ஐ., குறியீடு, மார்ச் மாதத்தில் 53.90 புள்ளிகளாக சரிந்துள்ளது. இதுவே, கடந்த 2022 ஜூன் மாதத்துக்கு பின் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளில் மிக குறைந்த வளர்ச்சியாகும். இக்குறியீடு 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருக்கும் வரை, வளர்ச்சியையே குறிக்கும் என்றாலும், கடந்த மாதத்துக்கான தரவுகள் வளர்ச்சி குறைந்துள் ளதை உணர்த்துகின்றன.
மேற்காசிய போரால் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு, வலுவான போட்டி, சந்தையில் நிலவும் அதீத நிச்சயமற்ற தன்மை ஆகியவை, இந்திய தயாரிப்பு துறை நிறுவனங்களின் செயல்பாடுகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
இதன் காரணமாக புதிய ஆர்டர்களும், உற்பத்தியும், கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக குறைந்த வேகத்தில் அதிகரித்துள்ளன.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
