சென்னை : 'வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை சட்ட திருத்தத்தை முற்றிலும் திரும்பப் பெறும் நடவடிக்கையை,

சென்னை : ‘வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை சட்ட திருத்தத்தை முற்றிலும் திரும்பப் பெறும் நடவடிக்கையை, பிரதமர் மோடி எடுக்க வேண்டும்’ என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை: வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை சட்ட முன்வரைவு என்ற பெயரில், பா.ஜ., அரசால் முன்மொழியப்பட்டிருக்கும் திருத்தங்கள், முழுக்க முழுக்க கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்களையும், தேவாலயங்களையும், மத சிறுபான்மை தொண்டு நிறுவனங்களையும் குறிவைத்து தொடுக்கப்படும் நேரடி தாக்குதல்.

ஏற்கனவே வக்பு வாரிய சட்ட திருத்தம் வாயிலாக இஸ்லாமிய சொத்துக்களை கபளீகரம் செய்ய முயன்றதையடுத்து, தற்போது மற்ற மத சிறுபான்மையின அமைப்புகள், வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதியை முடக்கும் முயற்சியில் மத்திய பா.ஜ., அரசு இறங்கியுள்ளது.

எதிர்க்கட்சிகளின் போராட்டத்தாலும், கிறிஸ்துவர்கள் அதிகம் வாழும் கேரளத்தில் தேர்தல் நடக்க இருப்பதாலும், இப்போதைக்கு பின்வாங்குவது போல் நடித்து, விரைவில் பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தை கூட்டி, இந்த சட்ட திருத்தத்தை நிறைவேற்ற பா.ஜ., அரசு திட்டமிடுவதாக அறிகிறேன்.

இந்த முயற்சிகளை கைவிட்டு, பிரதமர் மோடி இந்த தன்னிச்சையான அநியாய சட்ட திருத்தத்தை முற்றிலும் திரும்பப் பெறும் நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், த.வெ.க., பொதுச் செயலர் ஆனந்தும், ”சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை முடக்கும் வகையிலான சட்ட திருத்த மசோதாவை, மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்’ என வலியுறுத்தி உள்ளார்.

மதத்தை குறிவைத்து கொண்டு வரப்படவில்லை
வெளிநாட்டு நிதி பங்களிப்பு சட்டம் முதலில் உருவாக்கப்பட்டதே, வெளிநாட்டு நிதி வரைவுகளை கட்டுப்படுத்தவும், அவை பயங்கரவாத நிதியுதவி, சட்ட விரோத மதமாற்ற செயல்கள் மற்றும் நாட்டின் சட்டம் – ஒழுங்கை பாதிக்கும் செயல்களில் பயன்படுத்தப்படுவதை தடுக்கவும் தான்.
குறிப்பாக, தமிழகம் போன்ற மாநிலங்களில் சட்டம் – ஒழுங்கு சவால்கள், போதைப்பொருள் ஊடுருவல் போன்ற விஷயங்கள் குறித்து அதிக கவலை நிலவுகின்ற சூழலில், இத்தகைய கட்டுப்பாடு மிகவும் அவசியமானவை. இத்திருத்தம் எந்த மதத்தையோ, சமூகத்தையோ குறிவைத்து கொண்டு வரப்படவில்லை. யாரும் தலைப்புகளை மட்டும் பார்த்து கருத்து உருவாக்கக்கூடாது.
– எஸ்.சுந்தர்ராமன், தலைவர், தமிழக பா.ஜ., தொழில் வல்லுனர் அணி

Source link