கட்சி பதவி விலகல் விவகாரம்; மாணிக்கம் தாகூர் விளக்கம்

– நமது நிருபர் –

காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலில், தன் ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என தெரிந்ததும், காங்கிரஸ் தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக, நேற்று முன்தினம் மாணிக்கம் தாகூர் எம்.பி., கூறியதாக தகவல் வெளியானது.

அதற்கான ராஜினாமா கடிதத்தை, டில்லி மேலிட தலைவர்களுக்கு அனுப்பியதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், ‘நான் ராஜினாமா செய்யவில்லை’ என, தனியார் ‘டிவி’க்கு அளித்த பேட்டியில் மாணிக்கம் தாகூர் கூறியிருந்தார். இதனால், கட்சி பதவியை அவர் ராஜினாமா செய்தாரா, இல்லையா என்ற குழப்பம் ஏற்பட்டது.

இந்நிலையில், அவர் வீடியோ வெளியிட்டு அளித்துள்ள விளக்கம்: தேவையில்லாத குழப்பம் உருவாகி உள்ளது. என்னை பொறுத்தவரையில், காங்கிரஸ் கட்சிக்கு என்னால் சிரமம் வரக்கூடாது. சில பொறுப்புகள் எனக்கு கொடுக்கப்பட்டிருந்தன; தேர்தல் சம்பந்தப்பட்டது என்றாலும் அது, மாநில அளவிலான பொறுப்பு. அந்த பொறுப்பில் தொடர விரும்பவில்லை.

இதை, கட்சித் தலைவர் கார்கேவிடம் தெரிவித்து விட்டேன். இந்த முடிவு, மார்ச் 28ம் தேதி இரவு எடுத்தது. இதில், வேறு எந்த குழப்பமும் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source link