புதுடில்லி: இந்தியாவில் கிளைகளை விரிவாக்கம் செய்ய ஜப்பான் நிறுவனங்களை அந்நாட்டு அரசு ஊக்குவித்து வருகிறது. நிறுவனங்களின் வசதிக்காக சிறப்பு அலுவலகம் ஒன்றையும் அந்நாட்டு வெளியுறவுத்துறை திறக்க உள்ளது.
இதுகுறித்து கூறப்படுவதாவது:
இந்தியாவுக்கும் — ஜப்பானுக்கும் இடையே பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் வெளியுறவு அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
ஜப்பானிய நிறுவனங்கள் இந்தியாவில் விரிவாக்கம் செய்ய உதவும் நோக்கில் சிறப்பு அலுவலகம் ஒன்றை அந்த அமைச்சகம் திறக்க உள்ளது.
இந்தியாவில் உள்ள ஜப்பானிய நிறுவனங்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளன.
இந்தியாவில் வெவ்வேறு மாநிலங்கள் வர்த்தகம் தொடர்பான விதிகளில் பல வேறுபாடுகளுடன் இருப்பது, சட்ட நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருப்பது, சிக்கலான வரி அமைப்பு ஆகியவை இருப்பதால் முதலீட்டு முடிவுகளை எடுப்பதில் சிரமங்கள் இருப்பதாக அவை கூறியுள்ளன.
இந்த சிக்கல்களை களையும் வகையில் சிறப்பு அலுவலகம் செயல்படும் என்று தெரிகிறது. இரு நாட்டு அரசுகளுடனும் பேசி, இவற்றை சரி செய்யும் பணியில் அந்த அலுவலகம் இயங்கும்.
இவ்வாறு கூறப்படுகிறது.
அடுத்த 10 ஆண்டுகளில் 5.22 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நம் நாட்டில் தனியார் நிறுவனங்கள் வாயிலாக முதலீடு செய்ய ஜப்பான் திட்டமிட்டு வருகிறது.
