– நமது சிறப்பு நிருபர் –
தே.ஜ., கூட்டணியை போல, தி.மு.க., கூட்டணியிலும் பல பிரச்னைகள் தலைதுாக்கி உள்ளன. தே.மு.தி.க.,வுக்கு 10 தொகுதிகள் கொடுத்ததிலும், தங்களுக்கு தொகுதிகளை குறைத்ததிலும் தி.மு.க., கூட்டணி கட்சியினர் அதிருப்தியில் இருக்கின்றனர். அது, இப்போது பிரசாரத்தில் எதிரொலிக்கிறது.
சென்னையின் ஒருசில தொகுதிகளை தவிர மற்ற இடங்களில் தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, பிரசாரம் செய்யவில்லை. இதனால், தே.மு.தி.க., ஓரளவுக்கு பலமாக இருக்கும், வட மாவட்ட தி.மு.க., வேட்பாளர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.
ஏற்கனவே, வி.சி.க, தலைவர் திருமாவளவனை பொது தொகுதியில் பிரசாரம் செய்ய தி.மு.க., அனுமதிக்கவில்லை. காட்பாடியில், தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன், வி.சி., கட்சி மாவட்டச் செயலரை பிரசார வாகனத்தில் இருந்து இறங்க சொன்னது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, தி.மு.க.,வுக்கு ஆதரவாக வி.சி.க., நிர்வாகிகள் பல இடங்களில் பிரசாரம் செய்வதை தவிர்த்து வருகின்றனர்.
போதாக்குறைக்கு, திருமாவளவன் தேர்தலில் போட்டியிடுவதால், மொத்த நிர்வாகிகளையும் காட்டுமன்னார்கோவிலுக்கு அவர் வரவழைக்க திட்டமிட்டுள்ளார். ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவும் அவரது மகன் துரையும் அவர்களது கட்சியினரை ஆதரித்துதான் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளனர். கம்யூனிஸ்ட் தலைவர்களும் தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வது சந்தேகம்தான் என கூறப்படுகிறது.
தேர்தலில் போட்டியிடாமல், தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல், ‛முக்கிய நகரங்களில் மட்டும் பிரசாரம் செய்வேன்; சிறு விமானம் வேண்டும்; நட்சத்திர ஹோட்டலில் எனக்கென ஒரு தளத்தையே ஏற்பாடு செய்ய வேண்டும்’ என நிபந்தனைகள் விதிப்பதாக தெரிகிறது. இதனால், கமல் மற்றும் பிரேமலதாவுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட ‛கேரவன்’கள், சும்மா கிடப்பதாக கட்சியினர் புலம்புகின்றனர்.
