காங்., எம்.பி., மாணிக்கம்தாகூரை நம்பி களமிறங்கிய ஆதரவாளர்கள் விரக்தி: மதுரையில் தனித்து விடப்பட்டதால் தவிப்பு

மதுரை: தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு பெற்றுத் தருவார் என காங்., எம்.பி., மாணிக்கம் தாகூரை நம்பியிருந்த ஆதரவாளர்கள் தற்போது தனித்து விடப்பட்டுள்ளதாக விரக்தியில் உள்ளனர்.

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என த.வெ.க., கூட்டணிக்கு அழைத்ததால் தமிழக காங்., நிர்வாகிகள் பலர் சட்டசபை தேர்தலில் அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என முயற்சி செய்தனர். அதுதொடர்பாக தி.மு.க., – காங்., நிர்வாகிகள் வெளிப்படையாக விமர்சனம் செய்தனர். மதுரையில் தி.மு.க., எம்.எல்.ஏ., தளபதி, ‘பூத் ஏஜன்ட் கூட ஆள் இல்லை. முதல்வர் ஸ்டாலின் இல்லையென்றால் இண்டி கூட்டணி இல்லை’ என விமர்சனம் செய்தனர்.

இதற்கு எம்.பி., மாணிக்கம் தாகூர் எதிர்ப்பு தெரிவித்து, தளபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குரல்கொடுத்தார். தளபதி தொகுதியான மதுரை வடக்கில் இம்முறை காங்., போட்டியிடும் என கூறி மாணிக்கம்தாகூர் தலைமையில் நடந்த தெற்கு மாவட்ட காங்., நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது வடக்கு தொகுதியில் முன்னாள் காங்., நகர் தலைவர் கார்த்திகேயன் தான் போட்டியிடுவார் என எம்.பி., வெளிப்படையாக பேசினார். அதன் பின்னரும் தி.மு.க.,வுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் பேசினார்.

ஆனால் தி.மு.க., – காங்., கூட்டணிக்கு பின் அமைதியானார். காங்.,க்கு ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளில் தனது ஆதரவாளர்கள் போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை என தமிழக காங்., மீது அதிருப்தியில் இருந்த மாணிக்கம் தாகூர், அதன் பின்னணியில் தி.மு.க., இருப்பதும் தெரிந்து விரக்தியானார். இதனால் அவர் வகித்த தேர்தல் மேலாண்மை, ஒருங்கிணைப்பு குழு தலைவர் பொறுப்பில் இருந்து விலகியதாக தகவல் வெளியானது. ஆனால் திடீரென்று அது தவறான தகவல் என மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். இப்படி குழப்பான நிலை உள்ளது.

இந்நிலையில் அவரை நம்பி தி.மு.க.,வை எதிர்த்த ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர்கள் கூறியதாவது: காங்கிரசில் பல ஆண்டுகளாக கோஷ்டி பூசல் இருக்கத்தான் செய்கிறது. போராடி தான் தன் ஆதரவாளர்களுக்கு முன்னாள் தலைவர்கள் பதவி, பொறுப்புக்களை பெற்றுத்தருகின்றனர். அதுபோல் நம்பி தான் தி.மு.க.,வை வெளிப்படையாக எதிர்த்து எம்.பி.,க்கு ஆதரவு அளித்தோம்.

மதுரை வடக்கு தொகுதி கிடைக்கவில்லை என்றால் தற்போதுள்ள பதவியில் அவர் இருந்துகொண்டே விருதுநகர் உள்ளிட்ட வேறு மாவட்ட தொகுதிகளில் ஆதரவாளர்களுக்கு வேட்பாளர் வாய்ப்பு பெற்றுத்தர முயற்சி செய்திருக்க வேண்டும். மதுரையில் தி.மு.க.,வினருடன் தற்போது பிரசாரத்திற்கு கூட செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்றனர்.

Source link