நியூயார்க்: அமெரிக்கா – ஈரான் இடையிலான போரை நிறுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க, தனித்தூதரை

நியூயார்க்: அமெரிக்கா – ஈரான் இடையிலான போரை நிறுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க, தனித்தூதரை அனுப்புவதாக ஐநா பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ் அறிவித்துள்ளார்.

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் 5வது வாரத்தை எட்டியுள்ளது. போர் காரணமாக கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டால் உலக நாடுகள் ஸ்தம்பித்து வருகின்றன. உடனடியாக இந்தப் போரை நிறுத்த வேண்டும் என்று பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், உலகளவில் நிலவும் மோசமான சூழலை தவிர்க்க, மேற்காசியாவில் நீடித்து வரும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஐநா சபையின் பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக நியூயார்க்கில் அவர் பேசியதாவது; போர் நீடிப்பது பேரழிவுக்கு வழிவகுக்கின்றன. தற்போது உலகம் ஒரு பரந்த போரின் விளிம்பில் இருக்கிறது. இது மேற்காசியா முழுவதையும் சீர்குலைக்கும். இதன் விளைவாக உலகம் முழுவதும் பெரிதும் பாதிப்பை சந்திக்க நேரிடும். இந்தப் போரின் விளைவுகள் பிராந்திய எல்லைகளைத் தாண்டிச் சென்றுவிட்டன. ஒவ்வொரு நாளும் உலகிற்கு ஆபத்துகள் அதிகரித்து வருகின்றன. ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்படுவது உலகப் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்யும். கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டால், எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்கள் விலை அதிகரித்துள்ளது. இதனால், பிலிப்பைன்ஸ் முதல் இலங்கை வரை உள்ள மக்கள் ஏற்கனவே பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். உலகின் ஏழ்மையான மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களால் மூச்சு கூட விட முடியாத நிலையை சந்திக்க வேண்டியிருக்கும்.

அனைத்து தரப்பினரும் தங்களின் பிரச்னைகளை சர்வதேச சட்டம் மற்றும் ஐநா சாசனத்திற்கு உட்பட்டு அமைதியான முறையில் பேசி தீர்க்க வேண்டும். ஏற்கனவே பொருளாதாரத்திற்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ள இந்தப் போரை நிறுத்த வேண்டிய தருணம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு வந்துவிட்டது. அதேபோல், அண்டை நாடுகளைத் தாக்குவதை நிறுத்திக் கொள்ளுமாறு ஈரானைக் கேட்டுக்கொள்கிறேன்.

போர் நிறுத்தத்திற்கான முயற்சிகளை முன்னெடுக்கவும், அமைதியை நிலைநாட்டவும், தனிப்பட்ட தூதர் ஜீன் அர்னால்ட்டை அங்கு அனுப்புகிறேன், இவ்வாறு அவர் கூறினார்.

Source link