நமது நிருபர்
சோழவந்தான், ஸ்ரீபெரும்புதூர், வேடசந்தூர், ராமநாதபுரம் ஆகிய நான்கு தொகுதிகள், ஒவ்வொரு தேர்தலின் போதும் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் கூட்டணிகளை சேர்ந்த வேட்பாளர்களையே தேர்வு செய்கின்றன.
தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. ஆனாலும் ஒரு சில தொகுதிகளுக்கு தனி மவுசு உண்டு. அந்த வகையில் சோழவந்தான், ஸ்ரீபெரும்புதூர், வேடசந்தூர், ராமநாதபுரம் ஆகிய நான்கு தொகுதிகள் பல்வேறு தரப்பினர் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நான்கு தொகுதியிலும் வெற்றி பெறும் வேட்பாளர்கள் ஆட்சியை பிடிக்கும் கூட்டணி கட்சியை சார்ந்தவர்களாகவே இருந்து வருகின்றனர்.
வேடசந்தூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய தொகுதிகளில் 1957ம் ஆண்டு முதல் இப்போக்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அதேவேளையில், சோழவந்தான் மற்றும் ராமநாதபுரம் தொகுதிகள் 1977ம் ஆண்டு முதல் இதே போக்கைப் பிரதிபலித்து வருகின்றன. இதனால் ஏப்ரல் 23ம் தேதி நடக்க உள்ள சட்டசபை தேர்தலிலும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட வேண்டிய முக்கியத் தொகுதிகளாக இவை திகழ்கின்றன.
வெற்றியைச் சுட்டிக்காட்டும் தொகுதிகள் என அழைக்கப்படும் இந்த நான்கு தொகுதிகளில் என்ன நடைபெறுகிறது? திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும், இத்தொகுதிகளில் தற்போது எம்எல்ஏவாக இருப்பவர்களையோ அல்லது கடந்த காலங்களில் வெற்றி பெற்றவர்களையோ மீண்டும் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளன.
வேடசந்தூர் மற்றும் சோழவந்தான் தொகுதிகளில், திமுக எம்எல்ஏவாக இருக்கும் காந்திராஜன் மற்றும் வெங்கடேசன் ஆகியோர், 2021 தேர்தலில் தங்களால் தோற்கடிக்கப்பட்ட அதிமுக வேட்பாளர்களான வி.பி.பி. பரமசிவன் மற்றும் மாணிக்கம் ஆகியோரை மீண்டும் எதிர்கொள்ள உள்ளனர். இது இரு தரப்பினருக்கும் இடையிலான நேரடி மறுபோட்டியாக அமைகிறது.
பாஜ மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இன்னும் தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை. ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பழனியை எதிர்த்து செல்வப்பெருந்தகை போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. குறிப்பிட்ட இந்த நான்கு தொகுதிகளும் ஒட்டுமொத்தமாக தமிழக மக்கள் மனநிலையை பிரதிபலிப்பதாக இருக்கின்றன என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
