நமது நிருபர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பி விருப்ப மனு கொடுத்த கமல் கட்சியினர்,

நமது நிருபர்

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பி விருப்ப மனு கொடுத்த கமல் கட்சியினர், இப்போது விண்ணப்பக் கட்டணத்தை திரும்ப கேட்கின்றனர்.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனுக்கு ஒரு ராஜ்யசபா சீட் கொடுத்து திமுக தன் வசப்படுத்தியது. அதுமட்டுமின்றி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் திமுக கட்டளையிட்டதால், தன் விருப்பமின்மையை வெளிப்படுத்தும் வகையில், ” தேர்தலிலேயே போட்டியிடவில்லை” என்று ஜகா வாங்கிவிட்டார். கமல் எடுத்த முடிவு, அக்கட்சியின் நிர்வாகிகள் மத்தியில் பரவலான ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக தேர்தல் நெருங்குவதை கருத்தில் கொண்டு, தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி உறுப்பினர்களிடம் இருந்து மக்கள் நீதி மய்யம் விண்ணப்பங்களை வரவேற்றிருந்தது. விண்ணப்பிக்கும் ஒவ்வொருவரும் 50 ஆயிரம் ரூபாய் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. இத்தொகை, மாநிலத்தில் உள்ள பிற அரசியல் கட்சிகள் வசூலிக்கும் கட்டணத்தை விட மிக அதிகம் என்று பல தொண்டர்கள் தங்களது குமுறலை வெளிப்படுத்தி இருந்தனர்.

ஆரம்பத்தில் இக்கட்டணம் குறித்துச் சில தயக்கங்கள் நிலவியபோதிலும் தமிழகம் முழுவதும் 60க்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து உரிய கட்டணத்தையும் செலுத்தினர். கடைசியில், தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கமல் வெளியிட்ட அறிவிப்பு, விண்ணப்பித்த பலரை மிகுந்த ஏமாற்றத்திற்கும் மனச்சோர்விற்கும் உள்ளாக்கியுள்ளது. அந்த அறிவிப்பில் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியவர்கள் குறித்தோ, பணம் திரும்ப வழங்கப்படும் என்பது குறித்தோ எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இது குறித்து,மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: தேர்தல்களிலேயே போட்டியிடப்போவதில்லை என்றால், ஒரு அரசியல் கட்சியை நடத்துவதன் நோக்கம் என்ன? இம்முறை நமக்கு நிச்சயம் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கும் என்று உறுதியாக நம்பி, எங்களில் பலரும் கடந்த சில ஆண்டுகளாகக் களத்தில் அயராது உழைத்தோம். கோவையை பொறுத்தவரை, தொண்டர்களின் எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக இருந்தன.

ஏனெனில், திமுக தலைமையிலான கூட்டணியில் மக்கள் நீதி மய்யமும் அங்கம் வகிப்பதால், கோவை தெற்குத் தொகுதியில் வெற்றிபெறக் கட்சிக்கு வலுவான வாய்ப்பு இருப்பதாக தொண்டர்கள் உறுதியாக இருந்தனர். இப்போது தேர்தலில் போட்டியிடாத நிலையில் விண்ணப்ப கட்டணத்தை திரும்பத் தரவேண்டியது தானே முறை? அதை தராமலும், அது பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடாமலும் இருப்பது என்ன நியாயம்?

இவ்வாறு கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Source link