சதுர்த்தி விழா: உப்பூர் கோவிலில் விநாயகர் திருக்கல்யாணம்

ராமேஸ்வரம்,

உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில் விநாயகருக்கு சித்தி, புத்தியுடன் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடந்தது.

விநாயகர் சதுர்த்தி விழா

ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்டது உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருக்கல்யாணம்

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 8-வது நாளான நேற்று விநாயகருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

இதையொட்டி விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் கோவில் அருகே உள்ள மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து நேற்று மாலை 4 மணி அளவில் விநாயகப்பெருமானால் சித்தி, புத்தி ஆகியோருக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்தது. இந்த திருக்கல்யாண உற்சவத்தை மணிகண்டன், சந்திரசேகர குருக்கள் நடத்தினர். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியின் திருக்கல்யாண திருக்கோலத்தை தரிசனம் செய்தனர்.

தமிழகத்திலேயே விநாயகருக்கு திருக்கல்யாணம் நடைபெறுவது உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா, திருக்கல்யாணம், திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்
திருக்கல்யாண வைபவத்தில் பங்கேற்ற பக்தர்கள்
தேரோட்டம்

விநாயகர் சதுர்த்தி விழாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியாக விநாயகர் சதுர்த்தியான நாளை (திங்கட்கிழமை) கோவிலில் இருந்து வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. இதைத்தொடர்ந்து பக்தர்கள் கோவிலின் முன்பு அமைக்கப்பட்ட பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

Source link