பெங்களூரு,
எம்.எல்.ஏ. மருமகள்
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் உமேஷ் மேட்டி. இவரது மருமகளும், தற்போதைய மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர் ராஜ்குமாரின் மகளுமான டாக்டர் அங்கிதா கடந்த 2025-ம் ஆண்டு பாகல்கோட்டையில் உள்ள வாம்பே காலனியில் செயல்பட்டு வரும் ‘நம்ம கிளினிக்’ ஆஸ்பத்திரியில் அரசு மருத்துவ அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் பாகல்கோட்டையில் உள்ள எஸ்.என். மருத்துவக் கல்லூரியில் எம்.டி. டாக்டர் மேற்படிப்பில் அங்கிதா சேர்ந்துள்ளார். ஏப்ரல் மாதம் முதல் வகுப்புகள் தொடங்கப்பட்ட நிலையில், அவர்தான் பணியாற்ற வேண்டிய அரசு கிளினிக்கிற்கு செல்லாமல் முழுநேர மாணவியாக கல்லூரியிலேயே தனது படிப்பை தொடர்ந்ததாக கூறப்படுகிறது.
மோசடி குற்றச்சாட்டு
அரசு விதிமுறைகளின்படி முழுநேர எம்.டி. படிப்பை படிக்கும் ஒரு டாக்டர், அதே நேரத்தில் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து முழு சம்பளம் பெறுவது முற்றிலும் சட்டவிரோதமான செயலாகும். ஆனால், டாக்டர் அங்கிதா பணிக்கு வராமலேயே ஒவ்வொரு மாதமும் ரூ.75,000 அரசு சம்பளத்தை தவறாமல் பெற்று மோசடி செய்து வந்ததாக கூறப்படுகிறது. சுகாதாரத்துறையின் கணக்கு பதிவேடுகளை ஆய்வு செய்தபோது இந்த முறைகேடு தெரியவந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மருத்துவ அதிகாரி இல்லாததால், காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை செயல்பட வேண்டிய வாம்பே காலனி ‘நம்ம கிளினிக்’ பூட்டிய நிலையிலேயே காணப்படுவதாகவும், இதனால் அப்பகுதி பொதுமக்கள் மருத்துவ சேவை பெற முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தன் சொந்த மகளின் இந்த சட்டவிரோத நடவடிக்கையை அறிந்திருந்தும், மாவட்ட சுகாதார அதிகாரி ராஜ்குமார் கண்டுகொள்ளாமல் மறைத்து வந்துள்ளதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை…
இதுகுறித்து விளக்கம் அளித்த டாக்டர் ராஜ்குமார், இந்த நியமனம் முந்தைய அதிகாரியின் ஆட்சி காலத்தில் நடைபெற்றது என்றும், தற்போது அங்கிதாவின் சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தாலுகா சுகாதார அதிகாரி சரஸ்வதி கூறுகையில், அவர் எம்.டி. படிப்பது குறித்து தனக்கு தெரியாது என்றும், இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், மோசடி நடந்திருப்பது தெரியவந்தால், நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
