ஆன்லைன் உணவு விநியோகத் தளமான ஜொமாட்டோ (Zomato) ‘கேஷ் ஆன் டெலிவரி’ (COD) எனப்படும் டெலிவரியின் போது பணம் செலுத்தும் முறைக்கான ஆர்டர்களுக்குத் தனி கட்டணத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தக் கட்டணம் பயனர்கள் மற்றும் ஆர்டர் மதிப்புகளைப் பொறுத்து மாறுபடுகிறது. ஆர்டர் ரசீதில் “Pay on Delivery Fee” எனக் குறிப்பிடப்படும் இந்தக் கட்டணம் வாடிக்கையாளர்கள் உணவைப் பெற்றுக் கொள்ளும்போது பணமாகச் செலுத்தத் தேர்ந்தெடுக்கும்போது விதிக்கப்படுகிறது. இந்தக் கட்டணத் தொகை அனைத்து ஆர்டர்களுக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. வெவ்வேறு பரிவர்த்தனை மதிப்புகளுக்கு வெவ்வேறு கட்டணங்கள் பொருந்தும்.
முழு விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை!
இந்தக் கட்டணத்தை நிர்ணயிப்பதற்கான துல்லியமான அடிப்படை என்ன என்பது பற்றியோ அல்லது இது ஆர்டர் மதிப்பு, இருப்பிடம் அல்லது பிற காரணிகளுடன் தொடர்புடையதா என்பது பற்றியோ சரியாகத் தெரியவரவில்லை. இது குறித்து ஜொமாட்டோ நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை. இதன் போட்டியாளரான ஸ்விகி தற்போது கேஷ் ஆன் டெலிவரி ஆர்டர்களுக்குத் தனி கட்டணம் எதையும் வசூலிப்பதில்லை. உணவு விநியோகத் தளங்கள் பல்வேறு கட்டண முறைகள் மற்றும் வருவாய் ஈட்டும் வழிகளைத் தொடர்ந்து பரிசோதித்து வரும் சூழலில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கேஷ் ஆன் டெலிவரி ஆர்டர்களுக்கான இந்தக் புதிய கட்டணத்தைத் தவிர ஜொமாட்டோ ஏற்கனவே உணவு ஆர்டர்களுக்கு பிளாட்ஃபார்ம் கட்டணம் (platform fee) மற்றும் ஆர்டரைப் பொறுத்து விநியோகம், பேக்கேஜிங் மற்றும் பிற கட்டணங்களையும் வசூலித்து வருகிறது.
சிறிய கட்டணங்கள் – பெரிய வருவாய்!
ஜொமாட்டோ நிறுவனத்தைப் பொறுத்தவரையில், இத்தகைய கட்டணங்களின் முக்கியத்துவம் என்பது ஒரு தனிப்பட்ட ஆர்டரில் வசூலிக்கப்படும் தொகையை விட, நிறுவனத்தின் செயல்பாட்டு அளவைப் பொறுத்தே அமைகிறது. ஜொமாட்டோ தினமும் சுமார் 23 முதல் 25 லட்சம் உணவு ஆர்டர்களைக் கையாளுகிறது. இந்த அளவில் ஒரு ஆர்டருக்கு ரூ. 5 கட்டணம் வசூலிக்கப்பட்டால் இது ஒரு நாளைக்கு ரூ. 1.15 கோடி முதல் ரூ. 1.25 கோடி கூடுதல் வருவாயையோ அல்லது ஆண்டுக்கு சுமார் ரூ. 456 கோடி வருவாயையோ ஈட்டித் தரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஜொமாட்டோ நிறுவனத்தின் மொத்த ஆர்டர்களில் கேஷ் ஆன் டெலிவரி ஆர்டர்கள் ஒரு சிறிய பகுதியை மட்டுமே கொண்டிருப்பதால் இது ஒரு கோட்பாட்டு ரீதியான அதிகபட்ச அளவாகவே இருக்கும். இருப்பினும், இத்தகைய தளத்தின் செயல்பாட்டு அளவைக் கருத்தில் கொள்ளும்போது சிறிய கட்டணங்கள் கூட எவ்வாறு குறிப்பிடத்தக்க வருவாய் ஆதாரமாக மாறும் என்பதை இது விளக்குகிறது.
2023ஆம் ஆண்டில் தளக் கட்டணம் விதிக்கப்பட்டது!
உணவு விநியோகத் தளங்கள் தளக் கட்டணங்களை 2023ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தியது. ஸ்விக்கி ரூ. 2 கட்டணத்தைச் சோதனை முறையில் அறிமுகப்படுத்தியது. அதைத் தொடர்ந்து, ஜொமாட்டோ நிறுவனமும் தனது சொந்த தளக் கட்டணத்தை அறிமுகப்படுத்தியது. ஆரம்பத்தில் பெயரளவிலான கட்டணமாக இருந்த இது இப்போது கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜொமோட்டோவின் தளக் கட்டணம் ஒரு ஆர்டருக்கு ரூ. 12.5-லிருந்து ரூ. 14.99 ஆகவும், கூடுதலாக ஜிஎஸ்டியுடனும் உயர்த்தப்பட்டது. நிறுவனத்தின் தற்போதைய ஆர்டர் அளவைக் கருத்தில் கொண்டால் கட்டணங்களில் ஒரு சிறிய அதிகரிப்பு கூட ஆண்டு வருவாயாக நூற்றுக்கணக்கான கோடி ரூபாயை ஈட்டித் தரும்.
ரூ. 4000 கோடி வரை வருவாய்!
இ-காமர்ஸ் மற்றும் உணவு விநியோக நிறுவனங்களுக்கான தளக் கட்டணங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ. 3,500 கோடி முதல் ரூ. 4,000 கோடி வரை ஒருங்கிணைந்த வருவாய் ஈட்ட முடியும் என்று கூறப்பட்டது. உணவு அல்லது விநியோகத்தின் அடிப்படை விலையை அதிகரிப்பதற்குப் பதிலாக, அவர்கள் பணம் செலுத்தும் இடத்தில் ஒரு சிறிய கட்டணத்தைச் சேர்த்து, மில்லியன் கணக்கான பரிவர்த்தனைகள் மூலம் வருவாய் ஈட்டலாம். COD கட்டணங்கள் இந்த உத்தியை மேலும் ஒரு படி மேலே கொண்டு செல்கின்றன. இதன் மூலம் வருவாயை பணம் செலுத்தும் முறையுடனே இணைக்கின்றன. ரொக்கமாகப் பணம் செலுத்த விரும்பும் வாடிக்கையாளர்கள் தங்கள் ஆர்டர்களில் ஏற்கனவே விதிக்கப்படும் பிற கட்டணங்களுக்கு மேலாக, இனி ஒரு கூடுதல் கட்டணத்தையும் செலுத்த வேண்டியிருக்கும்.
இதன் விளைவாக, உணவு விநியோகக் கட்டணப் பட்டியல்கள் மேலும் விரிவாகி உணவின் விலை, தளம், பேக்கேஜிங், விநியோகம், பணம் செலுத்துதல் மற்றும் வரிகளுக்கான கட்டணங்கள் ஆகியவற்றை உள்ளடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
