தமிழக சட்டமன்றத்தில் சில நாட்களுக்கு முன் முதல்வர் விஜய் மிசா குறித்தும், சர்க்காரியா கமிஷன் குறித்தும் பேசியிருந்தார். இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அவ்வகையில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எம்.பி. ஆ. ராசா, முன்னாள் அமைச்சர்கள் சேகர்பாபு, மா. சுப்பிரமணியன், மேயர் பிரியா உள்ளிட்ட பல்வேறு திமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்விகளுக்கு பதிலளித்த தெம்பற்ற முதலமைச்சர் விஜய், உதயநிதி ஸ்டாலின் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்காமல் பேசி முடித்தார் என விமர்சித்தார்.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணைச் பொதுச் செயலாளருமான ஆ. ராசா உரையாற்றும் போது, தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் குறித்து பேசியது தற்போதைய தமிழக அரசியல் சூழலில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
அவதூறாக பேசிய திமுகவினர்
சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், திமுக தலைவர் ஸ்டாலின் மிசாவில் கைதாகவில்லை, என்றும் அவர் வேறொரு சம்பவத்திற்காக கைதாகினார் என்றும் கூறி வந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய எம்பி ஆ. ராசா ‘’ அமைச்சர் நிர்மல் குமார் குறித்து ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியுள்ளார்.
மேலும் முன்னாள் அமைச்சர் சேகர் பாபு, திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி, ரிஷிவந்தம் தொகுதி எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் உள்ளிட்டோரும் அவதூறாகவும் இரட்டை அர்த்தங்கள் பயன்படுத்தியும் முதல்வர் சி. ஜோசப் விஜய் குறித்து பேசியுள்ளனர்.
ஆ. ராசா உள்ளிட்டோரின் பேச்சுகள் சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நேற்று திமுக மற்றும் திமுகவின் போராட்டத்தை விமர்சித்து தவெக ஐடி விங் சார்பில் கண்டன அறிக்கை வெளியிடப்பட்டது.
சேம் சைட் கோல் அடித்த திமுகவினர்
தவெக வெற்றிக் கழக தலைவர் முதல்வர் விஜய்-ஐ கண்டித்து திமுக எடுத்த போராட்டம், தற்போது திமுகவிற்கு எதிராகவே திரும்பியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் திமுக தமிழகத்தின் முதன்மையான மக்கள் சார்ந்த பிரச்சனைகளை கையில் எடுக்காமல், தவெக தங்களை சுற்றி அமைக்கும் வளையத்திற்குள்ளாகவே திமுக சுற்றிக்கொண்டு இருப்பதாகவும், இதனால் திமுகவினர் பயன்படுத்தும் வார்த்தைகள் அவர்களுக்கே எதிராக மாறிவிடுவதாக கூறி வருகின்றனர்.
GenZ – தலைமுறையினரை தவறவிடுமா திமுக?
தவெக மற்றும் தவெக தொண்டர்கள் மீது திமுகவினர் விமர்சங்களையும், குற்றச்சாட்டுகளையும் வைத்து வருகின்றனர். அவர்கள் இன்னும் அரசியல்படுத்தப்படவில்லை, அரசியல் நாகரிகம் மற்றும் மாண்பும் இன்றியும், அரசியல் புரிதல் இன்றியும் நடந்துகொள்வதாகவும், சமூக வலைதளத்தில் அதிகம் களமாடும் தவெகவினர் தங்களை விமர்சிக்கும் நபர்கள் மீது தனி மனித தாக்குதல் மற்றும் கொச்சைப்படுத்தும் விதமாக பேசுவதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இப்படியான நிலையில் திமுகவின் முதன்மை மற்றும் இரண்டாம் கட்ட தலைவர்களே இது போன்று பொது வெளியில் அரசியல் நாகரிகமின்றி பேசியது, சமூக வலைதளம் மற்றும் அரசியல் களத்தில் பேசுபொருளாகியது, தவெகவிற்கு எதிராக எய்த அம்பு மீண்டும் திமுகவினர் பக்கமே திரும்பியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதே போக்கு தொடர்ந்து நீடித்தால் வருங்கால அரசியல் போக்கை தீர்மானிக்கும்GenZ தலைமுறையின் வாக்குகளையும், அவர்களுக்காக அரசியல் களத்தையும் திமுக பெறுவதில் கடும் சிக்கல் ஏற்படுமெனவும் தெரிவிக்கின்றனர்.
திமுகவிற்கு சாதகமாகுமா இடைத்தேர்தல்?
சமீபத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் இடைத்தேர்தல் தொடங்கப்பட்டது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ள சமயத்தில் திமுகவினர் இது போன்று ஆபாசமாக பேசுவது, இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி கேள்விக்குள்ளாகும் எனவும் கூறப்படுகிறது.
சமூக வலைதளங்களில் அதிகம் களம் காணும் தவெகவினர் எளிதாக இதுபோன்ற பேச்சுக்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பார்கள் எனவும், தவெக மீதும் தவெக அரசின் மீதும் இன்னும் மக்களுக்கு ஒரு நிலையான அதிருப்தி ஏற்படாத இந்த சூழலில் திமுகவினரின் இந்த பேச்சுகள் மூலம் எளிதாக முதல் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் இளைஞர்கள், பெண்கள் மத்தியில் திமுக மீது எதிரான மனநிலை தோன்றும் எனவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
கவனம் பெற்ற கனிமொழியின் பதிவு
தொடர்ந்து CPM மாநிலச் செயலாளர் சண்முகம், நாதக இடும்பாவனம் கார்த்திக் மற்றும் தவெக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆ. ராசாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் எம்பி கனிமொழி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ”யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு’ எனும் திருக்குறள் தனி கவனம் பெற்றுள்ளது. இதன் மூலம் அவர் தனது கட்சியினரை மறைமுகமாக கண்டித்துள்ளதாகவும் தெரியவருகிறது.
வருத்தம் தெரிவித்த ஆ. ராசா
இந்நிலையில் நேற்று பேசியதற்கு ஆ. ராசா வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், தியாகத்தில் விளைந்த ஒரு தலைவனின் ‘அடையாளத்தை’ – ‘உண்மையை’ வேண்டுமென்றே திட்டமிட்டு உள்நோக்கத்தோடு மீண்டும் மீண்டும் ‘பொய்’ என்று கொச்சைப்படுத்தி ‘ஏளனம்’ செய்ததால் ஏற்பட்ட ‘வலியை’ உணர்த்த ஏளனம் செய்தவரின் ‘அடையாளத்தை’ ‘உண்மையை’ உணர்ச்சி உந்துதலில் கேள்விக்குள்ளாக்கியதில் எனக்கும் வருத்தம்தான் என தெரிவித்துள்ளார்.
மேலும் என் வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் எனக்குத் தயக்கமில்லை. நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள் என அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
