வட மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சா மூட்டைகள் புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம் ஆகிய கிழக்கு கடற்கரை பகுதியில் இருந்து படகுகள் மூலம் இலங்கைக்கு வசகடத்தப்படுவது தொடர்கதையாக உள்ளது. அடிக்கடி போலிசார் பிடித்தாலும் கஞ்சா கடத்தல்கள் குறையவில்லை. இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி தளத்தில் இருந்து வினோத் என்பவரின் விசைப்படகில் நேற்று முன் தினம் (01.04.2206) மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
20 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துள்ளனர். அதே பகுதியில் தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் மீனவர்களும் மீன்பிடித்துள்ளனர். அப்போது கடலில் பாலிதீன் பைகளில் கட்டப்பட்ட சில மூட்டைகள் மிதந்து வருவதைப் பார்த்து மீனவர்கள் அந்த மூட்டைகளைக் கைப்பற்றி ஜெகதாப்பட்டினம் படகில் ஒரு மூட்டையும், சேதுபாவாசத்திரம் மினவர்கள் ஒரு மூட்டையும் தூக்கிச் சென்று கடலோர காவல் போலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். போலிசார் அந்த மூட்டைகளைப் பிரித்துப் பார்த்த போது தலா 2 கிலோ எடையுள்ள 12 பண்டல்கள் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. சுமார் 48 கிலோ கஞ்சாவை கடலோர போலிசார் கைப்பற்றி உள்ளனர்.
இது குறித்து மீனவர்கள் கூறும் போது, கிழக்கு கடற்கரை வழியாக கஞ்சா கடத்திச் செல்லும் போது நடுக்கடலில் இலங்கை கடத்தல்காரர்கள் வந்து வாங்கிச் செல்வார்கள். ஆனால் நடுக்கடலில் கடற்படை ரோந்து இருக்கும் பட்சத்தில் கஞ்சா பண்டல்களை படகு மாற்ற முடியாமல் தவித்துக் கரைக்கும் கொண்டு வர முடியாமல் சிக்கிக் கொள்வோமோ என்று கடலில் தூக்கி வீசுவதும் உண்டு. மேலும் கடற்படை ரோந்து கப்பலிடம் இருந்து தப்பிக்கவும் கஞ்சா மூட்டைகளைக் கடலில் வீசி தப்பிச் செல்வார்கள். அதே போல கஞ்சா கடத்தில் படகில் பழுது ஏற்பட்டு மூழ்கும் போது கஞ்சா மூட்டைகளும் தண்ணீரில் விழுந்து மிதக்கும். இந்த கஞ்சா பண்டல்களுக்குள் தண்ணீர் போகாமல் பாதுகாப்பாக பிளாஸ்டிக் பயன்படுத்தி பார்சல் செய்திருப்பார்கள் என்றனர்.
