ஸ்ரீவைகுண்டம்,
நெல்லை அருகே பள்ளிக்கூடத்தில் மாணவரை முட்டிப்போட வைத்து வேப்பங்கம்பால் சரமாரியாக ஆசிரியர் தாக்கினார். இதில் காயமடைந்த மாணவரின் தந்தை போலீசில் புகார் செய்தார்.
அரசு உயர்நிலைப்பள்ளி
நெல்லை அடுத்த முறப்பநாடு அருகே உள்ள அனவரதநல்லூர் மேலத்தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் பவின்(வயது 12). இவர் அதே ஊரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் மதியம் பள்ளியில் வகுப்பறை நடைபெற்றபோது பவின் இயற்கை உபாதை கழிக்க ஆசிரியரிடம் அனுமதி கேட்டார். ஆனால் அவர் அனுமதி கொடுக்க மறுத்து விட்டார். பின்னர் வகுப்பு முடிந்ததும் பவின் அவசரமாக கழிவறைக்கு புறப்பட்டார்.
போலீஸ் நிலையம்
இதனை பார்த்த ஆசிரியர், மாணவனை அழைத்து முட்டிப்போட வைத்ததுடன் வேப்பங்கம்பால் பின்னங்கால், கை மற்றும் முதுகு உள்ளிட்ட பகுதிகளில் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மாணவனுக்கு உடலின் பல்வேறு பகுதிகளில் வீக்கம் உருவாகி வலி ஏற்பட்டது. பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற மாணவன், நடந்த சம்பவம் குறித்து தனது தந்தையிடம் கூறினார். இதையடுத்து அவர், முறப்பநாடு போலீஸ் நிலையத்தில் ஆசிரியர் மீது புகார் அளித்தார். பின்னர் காயமடைந்த தனது மகனை நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகிறார்.
இதுகுறித்து மாரியப்பன் கூறியதாவது:-
பள்ளிக்கூடத்தில் இயற்கை உபாதை கழிக்க செல்வது குற்றமா? எனது மகன் வகுப்பறை முடிந்த பிறகுதான் கழிவறைக்கு சென்றார். இருந்தபோதும் ஆசிரியர் அனைத்து மாணவர்கள் முன்னிலையில், முட்டிப்போட வைத்து கடுமையாக தாக்கி உள்ளார். இதனால் கை, கால், தொடை உள்ளிட்ட பகுதிகளில் வீக்கம் ஏற்பட்டு வலி தாங்க முடியாமல் எனது மகன் அவதிப்பட்டு வருகிறார்.
மேலும், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் சில ஆசிரியர்கள் மருத்துவமனைக்கு வந்து புகாரை வாபஸ் பெறுமாறு வற்புறுத்துகின்றனர். ஆனால் நான் புகாரை வாபஸ் பெறப்போவதில்லை. எனது மகனை தாக்கிய ஆசிரியர் மீதும், சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க தவறிய தலைமை ஆசிரியர் மீதும் கல்வித்துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
