பட மூலாதாரம், South Wales Police
கட்டுரை தகவல்
இறந்த தனது தாயின் உடலை வீட்டில் இருந்த குளிர்சாதனப் பெட்டியில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக வைத்திருந்ததுடன், அவரது ஓய்வூதியம் மற்றும் அரசு நலத்திட்ட உதவித்தொகைகளையும் தொடர்ந்து பெற்றுவந்த ஒருவருக்கு இரண்டு ஆண்டுகள் நான்கு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனின் பிரிட்ஜெண்ட் கவுன்டியில் உள்ள போர்த்கால் நகரின் பாப்லர் கிரசென்ட் பகுதியில், 89 வயதான சில்வியா பிலிப்ஸின் உடல் காவல்துறையினரால் பிப்ரவரியில் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து 60 வயதான கிறிஸ்டோஃபர் பிலிப்ஸ் கைது செய்யப்பட்டார்.
சில்வியா பிலிப்ஸ் 2023 மார்ச் மாதம் உயிரிழந்திருந்தார்.
அவர் உயிரிழந்த பிறகு, “அவரை விட்டுவிட நான் விரும்பவில்லை” என்றும், “இன்னும் சிறிது காலம் வேண்டும்” என்றும் கிறிஸ்டோஃபர் பிலிப்ஸ் மருத்துவர்களிடம் தெரிவித்திருந்தார்.
சில்வியா பிலிப்ஸின் உடல் சிறுத்தை பட அச்சு கொண்ட பட்டுத் துணியால் சுற்றப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவரது உடலின் மீது மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு நிற ரோஜாக்கள் வைக்கப்பட்டிருந்தன. மேலும், கிறிஸ்டோஃபரும் குடும்பத்தின் செல்ல நாயான டினாவும் கையெழுத்திட்ட பிறந்தநாள் வாழ்த்து அட்டையும் அங்கு இருந்தது.
அந்த அட்டையில், “அம்மாவுக்கு, கிறிஸ்டோஃபர் மற்றும் டினாவிடமிருந்து” என்று எழுதப்பட்டிருந்தது.
தனது தாயின் உடலை சட்டப்படி மற்றும் மரியாதையுடன் அடக்கம் செய்யத் தவறியது, மேலும் அவரது ஓய்வூதியம், வீட்டு வசதி உதவித்தொகை மற்றும் குளிர்கால எரிபொருள் உதவித்தொகை உள்ளிட்ட நலன்களைத் தொடர்ந்து பெற்றது உட்பட மூன்று குற்றச்சாட்டுகளை பிலிப்ஸ் ஒப்புக்கொண்டார்.
இரண்டு வயதில் சில்வியா பிலிப்ஸால் தத்தெடுக்கப்பட்ட கிறிஸ்டோஃபர் பிலிப்ஸ், அவருடன் “மிகவும் நெருக்கமான” உறவைக் கொண்டிருந்ததுடன், அவரது ஒரே பராமரிப்பாளராகவும் இருந்தார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
2023 மார்ச் 8 ஆம் தேதி சில்வியா பிலிப்ஸ் உயிரிழந்த மறுநாள், அவரது மகன் அவரைத் தனது கரங்களில் ஏந்திக்கொண்டு, “நான் உங்களைக் கவனித்துக்கொள்வேன்” என்று கூறியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அவர் உயிரிழந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, பிலிப்ஸ் ஒரு பெரிய குளிர்சாதனப் பெட்டியை வாங்கி, அதை தனது குடியிருப்பு வீட்டின் உணவருந்தும் அறையில் வைத்தார். சில்வியா பிலிப்பிஸின் உடல், அவரது குடும்ப மருத்துவர் கோரிய நலவிசாரணை நடவடிக்கையின் போது காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்படும் வரை குளிர்சாதன பெட்டியிலேயே இருந்தது.
உள்ளூர் மருத்துவ மையம் சில்வியா பிலிப்ஸைத் தொடர்புகொள்ள பலமுறை முயன்றதாகவும், ஆனால் அவரது மகன் அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
காவல்துறையினர் வீட்டுக்குச் சென்றபோது, தனது தாய் லண்டனுக்குச் சென்றுவிட்டதாகவும், மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள விரும்பவில்லை என்றும் பிலிப்ஸ் கூறினார்.
ஆனால், பிலிப்ஸ் நடுங்கிக்கொண்டிருந்ததும் பதற்றமாக நடந்துகொண்டிருந்ததும் அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் அவர் மாடிக்குச் சென்று, “காவல்துறையினர் என்னைக் கைது செய்யப் போகிறார்கள், உயில் உன்னிடம்தான் இருக்கிறது” என்று தனது காதலியிடம் தொலைபேசியில் கூறியது கேட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
குளிர்சாதனப் பெட்டியைத் திறந்த அதிகாரிகள், 89 வயதான சில்வியா பிலிப்ஸின் உடல் முழுமையாக உறைந்த நிலையில் இருந்ததைக் கண்டனர். இதனால் உடற்கூறு பரிசோதனையை மேற்கொள்வதற்கும் சில காலம் பிடித்தது.
உடற்கூறு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவரால் மரணத்திற்கான காரணத்தை உறுதிப்படுத்த முடியவில்லை. எனினும், அவரது மரணத்தில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள் எதுவும் இல்லை என்று கருதப்படுகிறது.
பிலிப்ஸ் கீழ்தள அறைக்குச் சென்று தனது தாயின் உடலுக்கு அருகிலேயே தூங்கத் தொடங்கினார். சில நேரங்களில் அவர் குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து அவரது கையைப் பிடித்துக்கொண்டு இருப்பார் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சில்வியா பிலிப்ஸ் 2021 ஆம் ஆண்டில் தனது உள்ளூர் குடும்ப மருத்துவரை 26 முறை சந்தித்திருந்தார். 2022 ஆம் ஆண்டில் ஆறு முறை சென்றிருந்த நிலையில், அதன்பிறகு அவருடன் எந்தத் தொடர்பும் பதிவாகவில்லை.
அவர் கடைசியாக 2022 செப்டம்பர் 24 அன்று அவசர சிகிச்சைப் பிரிவில் காணப்பட்டதாகவும், இரண்டு நாட்களுக்குப் பிறகு அவரது குடும்ப மருத்துவர் வீட்டிற்கு வந்து பார்த்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதன் பின்னரும் அவரது மகன் அவருக்கான மருந்துகளை தொடர்ந்து பெற்றுவந்தார்.
சில்வியா பிலிப்ஸை மருத்துவ ஆய்வுக்காக வருமாறு அழைத்தபோது, அவர் மருத்துவமனைக்கு வரமாட்டார் என்றும், ரத்தப் பரிசோதனைகள் தேவையில்லை என்றும் அவரது மகன் தெரிவித்தார்.
சில்வியா பிலிப்ஸின் மரணம் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தால் நிறுத்தப்பட்டிருக்கும் அரசு ஓய்வூதியம், ஓய்வூதியக் கடன், பராமரிப்பு உதவித்தொகை, குளிர்கால எரிபொருள் உதவி, வாழ்க்கைச் செலவின உதவித்தொகை மற்றும் வீட்டு வசதி உதவித்தொகை உள்ளிட்ட தொகைகளாக மொத்தம் 78,190 பவுண்டுகளை கிறிஸ்டோஃபர் பிலிப்ஸ் பெற்றிருந்தார்.
2008-ஆம் ஆண்டு முதல் தனது தாயின் முதன்மை பராமரிப்பாளராக இருந்த அவர், அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் 2022 ஆம் ஆண்டின் இறுதியில் தனது வேலையிலிருந்து விலகியிருந்தார் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தாயும் மகனும் “ஓரளவு தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கை” வாழ்ந்ததாக விவரிக்கப்பட்டனர்.
பிலிப்ஸுக்காக ஆஜரான வழக்கறிஞர் ரூத் ஸ்மித், “அவரை விட்டுவிட நான் விரும்பவில்லை” என்று பிலிப்ஸ் காவல்துறையினரிடம் கூறியதாக தெரிவித்தார்.
மேலும், “அவர் இன்னும் உயிருடன் இருப்பதைப் போல அவரிடம் பேசிக்கொண்டிருந்ததாக கூறினார். அவருக்கு அருகில் அமர்ந்து, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ‘கொரோனேஷன் ஸ்ட்ரீட்’ தொடர், குதிரைப் பந்தயம் போன்ற விஷயங்களைப் பற்றி அவர்கள் முன்பு எப்போதும் பேசுவதைப் போலவே பேசிக்கொண்டிருந்தார்” என்றும், அவர் “மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருந்தவர்” என்றும் கூறினார்.
அவர் “தனது தாயுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார்” என்றும், அவரது மரணத்தால் “மிகுந்த துயரத்தில்” இருந்தார் என்றும் ஸ்மித் கூறியபோது, பிலிப்ஸ் குற்றஞ்சாட்டப்பட்டவர்க்ள் அமரும் இடத்தில் அமர்ந்தபடியே அழுதார்.
தனது தாயின் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாத நிலை அவருக்கு இருந்ததாகவும், “அவர் இன்னும் உயிருடன் இருப்பதைப் போன்ற ஒரு கற்பனைச் சூழலை உருவாக்கியிருந்தார்” என்றும் அவர் தெரிவித்தார்.
பிலிப்ஸுக்கு இரண்டு ஆண்டுகள் நான்கு மாதங்கள் சிறைத் தண்டனை விதித்த நீதிபதி லாய்ட்-கிளார்க், அதில் 40% காலத்தை சிறையில் கழிக்க வேண்டியிருக்கும் என்றும், மீதமுள்ள காலத்தை நிபந்தனை கண்காணிப்பில் கழிக்க வேண்டியிருக்கும் என்றும் கூறினார்.
“உங்கள் தாயின் மரணத்தை நீங்கள் வேண்டுமென்றே மறைத்தீர்கள். அவர் இன்னும் உயிருடன் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகளையும் எடுத்தீர்கள்,” என்று நீதிபதி கூறினார்.
“அவருக்கான மருந்துகளைத் தொடர்ந்து பெற்றுக்கொண்டதுடன், மருத்துவப் பணியாளர்களிடமும் பின்னர் காவல்துறையினரிடமும் பொய் கூறினீர்கள்,” என்றும் அவர் தெரிவித்தார்.
“அவரது மரணத்தை அதிகாரிகளுக்கு தெரிவித்து, சட்டப்படி அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்குப் பதிலாக, 2023 மார்ச் 10 அன்று ஒரு பெரிய குளிர்சாதனப் பெட்டியை வாங்கி, அவரது உடலை அதில் மறைத்துவைத்தீர்கள்,” என்றும் நீதிபதி கூறினார்.
மேலும், சட்டவிரோதமாகப் பெற்ற பணத்தை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளுக்கான கால அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

