அணுசக்தி ஒப்பந்தத்துக்கு சம்மதிக்காவிட்டால் கடும் விளைவை சந்திக்க நேரிடும்; ஈரானுக்கு அதிபர் டிரம்ப் மிரட்டல்

வாஷிங்டன்: அணுசக்தி திட்டத்திற்கான புதிய ஒப்பந்தத்திற்கு ஈரான் சம்மதிக்காவிட்டால் அதன் விளைவுகள் மிகவும் கடுமையாக இருக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.

நடவடிக்கை

மேற்காசிய நாடான ஈரானுடன், 2015ல் கையெழுத்தான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து, 2018ல், அமெரிக்கா விலகியது. இதைத் தொடர்ந்து ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடை, அணு ஆயுதம் தயாரிப்பதாகக் கூறி தாக்குதல் போன்ற நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டது.

இந்நிலையில், அணுசக்தி தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்படி, ஈரானுக்கு அமெரிக்கா நெருக்கடி கொடுத்தது. இதன்படி, மேற்காசிய நாடான ஓமன் தலை நகர் மஸ்கட்டில் பேச்சு நடந்தது. இது நேரடியாக இல்லாமல், ஓமன் வெளியுறவுத் துறை அமைச்சர் சயீத் பத்தர் பின் ஹமத் அல் புசைதி உடன், அமெரிக்க, ஈரான் பிரதிநிதிகள் தனித்தனியாக பேச்சு நடத்தினர் .

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளதாவது:புதிதாக ஒரு ஒப்பந்தத்தை எட்ட வேண்டிய கட்டாயத்தில் ஈரான் உள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு சம்மதிக்காவிட்டால் அதன் விளைவுகள் மிகவும் கடுமையாக இருக்கும் என்பது ஈரானுக்கு தெரியும். கடந்தாண்டு ஜூனில், ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலை விட இது மிக கடுமையானதா க இருக்கும்.

தற்போது, அமெரிக்காவின் பிரமாண்ட கடற்படை ஈரானை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. ஈரான் சரியான முடிவை எடுக்காவிட்டால், ராணுவ தாக்குதல் நடத்த தயங்க மாட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.

ஈரான் தன் மண்ணில் யுரேனியம் செறிவூட்டலை முற்றிலுமாக நிறுத்த வேண்டும், ஏவுகணை திட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என, அமெரிக்கா நிபந்தனை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், இவற்றை ஈரான் நிராகரித்துள்ளதாக தெரிகிறது.

நிராகரிப்பு

அடுத்தக்கட்ட பேச்சு அடுத்த வார துவக்கத்தில் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பேச்சு நடக்கும் நிலையில், டிரம்ப் ஒரு புதிய அதிரடி உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.

இதன்படி, ஈரானுடன் வணிகம் மற்றும் வர்த்தக தொடர்பு வைத்துள்ள எந்தவொரு நாட்டின் பொருட்களும், அமெரிக்காவில் இறக்குமதியாகும் போது, அதன்மீது கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிரட்டல் வேண்டாம்

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியுள்ளதாவது: ஓமனில் ந டந்த பேச்சு ஆக்கப்பூர்வமாக இருந்தது. இப்பாதையில் நாம் சென்றால், ஈரான் – அமெரிக்கா இடையே ஒரு நல்ல உடன்பாட்டை எட்ட முடியும். நடந்து முடிந்த பேச்சு ஈரானின் அணுசக்தி திட்டம் பற்றி மட்டுமே அமைந்திருந்தது. ஏவுகணை திட்டங்கள் அல்லது பிற விவகாரங்கள் குறித்து விவாதிக்கவில்லை. யுரேனியம் செறிவூட்டல் குறித்து விவாதிக்க ஈரான் தயாராக உள்ளது. எந்தவொரு பேச்சும் மிரட்டல்கள் மற்றும் அழுத்தங்கள் இல்லாத சூழலிலேயே வெற்றிகரமாக அமையும். அமெரிக்கா தன் மிரட்டல்களை நிறுத்தினால் மட்டுமே அடுத்தக்கட்ட முன்னேற்றம் சாத்தியமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Source link