கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளரான மகேஷ், நாகர்கோவில் மேயராக இருந்தார். இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க சார்பில் கன்னியாகுமரி தொகுதி மகேஷ் போட்டியிடுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
கன்னியாகுமரி தொகுதியில் உள்ள முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார் மகேஷ். மேலும், கன்னியாகுமரி தி.மு.க வேட்பாளர் மகேஷ், நாகர்கோவில் வேட்பாளர் ஆஸ்டின் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாளை (4-ம் தேதி) காலை முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அதற்கான ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர் என்ற முறையில் மகேஷ் செய்து வருகிறார்.
இதற்கிடையே மகேஷ் நாகர்கோவில் மேயர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் பேசினோம், “தேர்தல்களில் போட்டியிடுபவர்கள் ஆதாயம் பெறும் பதவிகளில் இருக்கக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. மேயர்களுக்கு மாதம் 30,000 ரூபாய் மதிப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. அதை கருத்தில்கொண்டு மேயர் பதவியை ராஜினாமா செய்ய அவர்கள் தலைமை கூறியிருக்கலாம். ஆனால், மதிப்பூதியம் பெறுபவர்கள் ராஜினாமா செய்ய வேண்டிய தேவை இல்லை. ஏனென்றால் எம்.எல்.ஏ-க்களுக்கு மதிப்பூதியம் வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதில்லையே” என்றனர்.

அதே சமயம், மேயர் பதவியில் இருப்பதால் சட்டமன்ற தேர்தலில் முழு கவனத்துடன் பணியாற்றாத நிலை ஏற்படலாம் என தி.மு.க தலைமை கருதியிருக்கலாம். ஒருவேளை எம்.எல்.ஏ ஆகாமல் இருந்தாலும் மேயர் பதவி இன்னும் சுமார் ஓராண்டு இருக்கிறதே என மெத்தனமாக இருந்துவிடுவார்களோ என்று கருதி கூட தி.மு.க தலைமை அப்படி ஒரு முடிவை எடுத்திருக்கலாம் எனவும் கருத்து எழுந்துள்ளது.
தலைமை கூறியதாலேயே மகேஷ் தனது மேயர் பதவியையும், வார்டு கவுன்சிலர் பதவியையும் ராஜிநாமா செய்ததாக கூறப்படுகிறது. அப்படியானால் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தஞ்சாவூர், திருப்பூர், ஓசூர் மேயர்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்யவில்லையே என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
