தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாகப் பரப்புரையில் இறங்கியுள்ளன. இதனிடையே, தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி இருக்கிறது. விடுமுறை நாட்கள் போக வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் ஒரு நாளே இருப்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேபோல் பிரச்சாரத்திலும் தீவிரம் காட்டி வருகின்றனர். மற்றொருபுறம் தேர்தல் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதன் காரணமாக, மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
இந்த நடத்தை விதிகள் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்றத் தொகுதியின் த.வெ.க. வேட்பாளராக ரேவதி முத்தமிழ்செல்வன் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ரேவதி குன்னம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் பகுதிகளில் அக்கட்சியின் நிர்வாகிகளைச் சந்திப்பதற்காகவும், வாக்கு சேகரிப்பதற்காகவும் கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி (31.03.2026) சென்றுள்ளார்.
அச்சமயத்தில் அக்கட்சியின் கிழக்கு ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தர்மேந்திரன் என்பவர் தலைமையிலான நிர்வாகிகளை ரேவதி சந்தித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சாத்தனூர் குடிகாடு கிராமத்தில் வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டுள்ளார். அப்போது சிறுவர்களை வாக்கு சேகரிப்பதற்கும், தேர்தல் பிரச்சாரத்திற்கும் பயன்படுத்தியுள்ளனர். அதோடு சிறுவர்கள் கட்சியின் பதாகைகளை ஏந்தியவாறு வாக்காளர்களிடம் வாக்கு கேட்டுச் செல்லக்கூடிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது.
இதனையடுத்து தேர்தல் ஆணையத்தின் பறக்கும்படை வட்டாட்சியர் சுதாகர் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், மருவத்தூர் போலீசார் தர்மேந்திரன் மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். த.வெ.க. வேட்பாளரின் பிரச்சாரத்திற்காகச் சிறுவர்களைப் பயன்படுத்தியதாக அக்கட்சியின் நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
