“போரை விரும்பாதவர்களுக்கான படம் நீளிரா” – சூர்யா புகழாரம்

சோமிதரன் இயக்கத்தில், நவீன் சந்திரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நீளிரா’. இப்படத்தை, கார்த்திக் சுப்பராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’ புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில், சனந்த், ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, வின்சென்ட் , விது, ரோஹித் கோக்கட்டே மற்றும் நவயுகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சிவா பத்மயன் இசையமைத்துள்ளார்.  

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போர் சூழலில், ஒரு திருமணத்திற்காகக்  காத்திருக்கும் மணமக்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் எதிர்கொள்ளும் சவால்களை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் இன்று (03-04-26) முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.  முன்னதாக, படத்தைப் பார்த்த விமர்சகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் இப்படத்தைக் கொண்டாடியுள்ளனர். அதே வேளையில், வெற்றிமாறன் உள்ளிட்ட திரைபிரபலங்களும் இப்படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர். 

அந்தவகையில், நடிகர் சூர்யாவும் இப்படத்தை மனம் திறந்து பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “நீளிரா என்றால் நீண்ட இரவு என்று அர்த்தம். சம காலத்தில் நிலவும் போர் சூழலால் நம்முடைய அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. குறிப்பாக, இந்த சூழலில் அதிகமாகப் பாதிக்கப்படுபவர்கள் சாமானியர்களாகவே இருக்கிறார்கள். 

அந்த வகையில், இந்த கதையில் போர் சூழலில் ஒரு கல்யாணம் நடக்கிறது. அந்த திருமணத்தை நடத்த முற்படும் மணமக்கள் மற்றும் உறவினர்கள், அந்த இரவை எப்படிக் கடக்கிறார்கள்? எத்தனை பேர் உயிர் பிழைக்கிறார்கள்? என்பது இப்படத்தில் அற்புதமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.  

அந்த இரவை உணர்ந்தவர், அந்த இரவை கடந்தவரே இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இலங்கைத் தமிழர் நண்பர் சோமிதரன், கடந்தகால போர் மற்றும் இப்போது இருக்கிற போர் சூழல் இதற்கெல்லாம் இந்த படம் ஒரு மௌன சாட்சியாக இருக்கும். இது போரை விரும்பாதவர்களுக்கான படம்” என்று தெரிவித்துள்ளார்.  

Source link