தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாகப் பரப்புரையில் இறங்கியுள்ளன. இதனிடையே, தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி இருக்கிறது. விடுமுறை நாட்கள் நீங்கலாக வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் ஒரு நாளே இருப்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேபோல் பிரச்சாரத்திலும் தீவிரம் காட்டி வருகின்றனர். எல்லாக் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ள சூழலில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடாத நிலை நிலவி வந்தது
இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மத்திய தேர்தல் குழு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான 27 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை இன்று (03.04.2026) வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முக்கியமான தலைவர்கள் பலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மயிலாப்பூர் தொகுதியில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், அவினாசி (தனி) தொகுதியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் மற்றும் கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களாக ஆவடியில் எம். ராஜசிம்ம மகிந்த்ரா, தளியில் நாகேஷ் குமார், திருவண்ணாமலையில் சி. ஏழுமலை, ராசிபுரத்தில் எஸ்.டி. பிரேம்குமார், மொடக்குறிச்சியில் கிருத்திகா சிவக்குமார், உதகமண்டலத்தில் போஜராஜன், திருப்பூர் தெற்கில் எஸ். தங்கராஜ், திருவாரூரில் கோவி சந்துரு மற்றும் தஞ்சாவூரில் எம். முருகானந்தம் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்
மேலும் இதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக, அக்கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியிலும், ராம ஸ்ரீனிவாசன் மதுரை தெற்கு தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். மேலும், காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த எஸ். விஜயதரணி விளவங்கோடு தொகுதியிலும், அக்கட்சியின் மூத்த தலைவர் எம்.ஆர். காந்தி நாகர்கோவில் தொகுதியிலும் களம் இறக்கப்பட்டுள்ளனர். இந்தப் பட்டியலில் கந்தர்வக்கோட்டை தனி தொகுதியில் சி. உதயகுமார், புதுக்கோட்டையில் என். ராமச்சந்திரன், அறந்தாங்கியில் கவிதா ஸ்ரீகாந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
திருப்பத்தூரில் கே.சி. திருமாரன், மானாமதுரை தனி தொகுதியில் பொன். வி. பாலகணபதி, ராமநாதபுரம் தொகுதியில் ஜி.பி.எஸ். கே. நாகேந்திரன், திருச்செந்தூர் தொகுதியில் கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன், வாசுதேவநல்லூர் தனி தொகுதியில் அனந்தன் அய்யாசாமி, ராதாபுரம் தொகுதியில் எஸ்.பி. பாலகிருஷ்ணன், குளச்சல் தொகுதியில் டி. சிவகுமார் மற்றும் பத்மநாபபுரம் பி. ரமேஷ் ஆகியோரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
