இந்தியத் திரையுலகில் பிரபல பாடகராக அறியப்படுபவர் எஸ்.பி.பாலசுப்ரமணியன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அது மட்டுமல்லாமல், ஆறு முறை தேசிய விருது மற்றும் எண்ணற்ற மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். அவர் இந்த உலகத்தை விட்டுப் பிரிந்தாலும், அவரது பாடல்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது.
எனவே, அவருக்கு மரியாதையைத் தெரிவிக்கும் விதமாக, அவரது திருவுருவ சிலைகள் அமைக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் சில சாலைகளுக்கும் அவரது பெயர் சூட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில், அவரது சொந்த ஊரான திருவள்ளூர் மாவட்டம், கோணேட்டம் பேட்டை கிராமத்தில் அவருக்கு 4 அடி உயரம் கொண்ட மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஐதராபாத்தில் அரசுக்குச் சொந்தமான ‘ரவீந்திர பாரதி’ என்ற கலாச்சார மையத்தில் முழு திருவுருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் கடைசியாக வாழ்ந்த சென்னை காம்தார் நகரில் சாலைக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதன் நீட்சியாக, கேரளத்திலும் அவருக்கு முழு உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் வி.டி.பட்டதிரிபாட் நினைவிடத்தில் அவரது உருவச் சிலை நிறுவப்பட்டு உள்ளது. இந்த சிலை திறப்பு விழா, கடந்த செவ்வாய் (31-03-26) அன்று நடைபெற்றது. 10 அடி உயரமுள்ள அந்த சிலையை ஆஸ்கர் விருது பெற்ற பிரபல இசை அமைப்பாளர் கீரவாணி திறந்து வைத்தார். இதில், பாடகர்கள் சித்ரா, சுஜாதா, மனோ, ஹரிகரன், உன்னிமேனன், ஸ்ரீனிவாஸ், எஸ்.பி.பி.சரண், மதுபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ரஜினி மற்றும் கமலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. சிலை திறப்பு முடிந்தவுடன் சமம் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ‘சங்கீத மேகம்’ எனும் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த சிலை அமைந்திருக்கும் பகுதியை இசை பூங்காவாக மேம்படுத்தவும் திட்டம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
