தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாகப் பரப்புரையில் இறங்கியுள்ளன. இதனிடையே, தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி இருக்கிறது. விடுமுறை நாட்கள் நீங்கலாக வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் ஒரு நாளே இருப்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேபோல் பிரச்சாரத்திலும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதற்கிடையே திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழர் தேசம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் உதயசூரியன் சின்னத்தில் அக்கட்சி போட்டியிடுவது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழர் தேசம் கட்சிக்குத் திண்டுக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட நத்தம் தொகுதி ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து அக்கட்சியின் நிறுவனர் கே.கே. செல்வகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் செல்வகுமாரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையானது எழுந்துள்ளது. இது தொடர்பாக தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினிடம் இந்தியத் தேசிய லீக் கட்சியினர் கோரிக்கையை முன் வைத்திருக்கின்றனர். அதாவது இந்தியத் தேசிய லீக் கட்சி உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று (03.04.2026) சந்தித்துப் பேசினர். அப்போது, “ செல்வகுமார் இவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்பில் உள்ளார். ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளார். பல சமயங்களில் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளராகச் செயல்பட்டுள்ளார். எனவே இவரை மாற்ற வேண்டும்” எனக் கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
இதனையடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இது குறித்துப் பேசி முடிவெடுப்பதாகத் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியின் வேட்பாளர் மீது குற்றம் சாட்டி, அவரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நத்தம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.
